தங்களது முதல் குழந்தையை இன்று காலை இனிதே வரவேற்றுள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியர். இது குறித்த தகவலை சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார் பும்ரா. தங்கள் மகனுக்கு அழகிய பெயரும் சூட்டி உள்ளனர் இந்த தம்பதியர்.
29 வயதான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கடந்த 2021இல் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர்.
“எங்களது சின்ன குடும்பம் வளர்ச்சி கண்டுள்ளது. எங்கள் இதயம் நாங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. இன்று காலை எங்கள் செல்ல மகன் ‘அங்கத் ஜஸ்பிரித் பும்ரா’வை உலகுக்கு வரவேற்றோம். எங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம்” என பும்ரா தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தம்பதியருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் என மொத்தம் 165 சர்வதேச போட்டிகளில் பும்ரா விளையாடி உள்ளார். மொத்தமாக 323 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் காயத்தில் இருந்து மீண்ட அவர், இந்திய அணிக்கு திரும்பியிருந்தார். நடப்பு ஆசிய கோப்பை தொடருக்காக இலங்கை பயணித்துள்ள இந்திய அணியுடன் சென்றிருந்தார். இந்நிலையில், குழந்தை பிறக்க இருந்த காரணத்துக்காக நேற்று (3) இலங்கையில் இருந்து அவர் நாடு திரும்பி இருந்தார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் அவர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.