சன்னி லியோன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று போலியாக விளம்பரம் செய்து, நடத்தப்பட்ட மெகா பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பெரும் தகராறு ஏற்பட்டதையடுத்து, பொலிசார் தலையிட்டு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள்.
அத்துடன், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.
கேரளாவின் கோழிக்கோடு சரோவரத்தில் உள்ள காலிகட் டிரேட் சென்டரில் நடந்து வந்த ‘ஃபேஷன் ரேஸ் – வின் யுவர் பேஷன்’ டிசைனர் ஷோ மற்றும் கோல்டன் ரீல்ஸ் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியே தகராறில் முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளம்பரம் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஜெ சிஞ்சுராணி மற்றும் சன்னி லியோன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ஃபேஷன் துறையில் முன் அனுபவம் இல்லாத குழந்தைகள் கூட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் விளம்பரம் இருந்தது.
ஒரு குழந்தைக்கு சுமார் 6000 ரூபாய் செலவாகும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக காவல்துறை கூறியது.
இந்த நிகழ்ச்சி கோழிக்கோட்டில் மூன்று நாட்கள் நடக்கிறது. பங்கேற்பாளர்கள் ஒரு நாள் முன்னதாக வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, மாநிலம் முழுவதிலும் இருந்து 764 குடும்பங்கள் கோழிக்கோடு வந்தடைந்துள்ளன.
வர்த்தக மையத்தில் குழந்தைகளுக்கு அழகிப் போட்டியில் நடை பயிற்சி அளிக்கப்படும் என்றும், சினிமா நட்சத்திரங்கள், முன்னணி வடிவமைப்பாளர்களினாலும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முன்னணி வடிவமைப்பாளர்கள் யாரும் பயிற்சியளிக்கவில்லை.
மேலும் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் மிகவும் தரமற்றவை என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
செப்டம்பர் 1 அன்று நிகழ்ச்சியில் ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. குழந்தைகள் அலங்கார நடையரங்கில் நடக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். ஆனால் அறிவித்தல்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால், நிகழ்வின் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பெற்றோரை தடுக்க முயன்றதால், மோதல் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் வந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர். வர்த்தக நிலையத்தில் நிகழ்வை நடத்த ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.