பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி. இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 28ஆம் திகதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், “சீமான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி என்னைத் திருமணம் செய்து கொண்டார். அன்றுமுதல் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால், நான் யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். அதை என்னுடைய அனுமதி இல்லாமலேயே அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார்.
மேலும், என்னிடமிருந்த ரூ.60 லட்சம் பணம், ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பெற்றுக்கொண்டார். பின்னர், அவர் எனக்குத் தெரியாமல் வேறு ஒருபெண்ணை திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு ‘சீமான் மீது மீண்டும் புகார் தெரிவிக்க வேண்டாம்’ என்று கூறி மிரட்டுகிறார். எனவே, சீமான் மீதும், மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப்புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் உமையாள் நேற்று விசாரணை நடத்தினார். இதனால், இந்த வழக்குஅடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக போலீஸார் கூறினர்.