தான் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூரிலுள்ள பேருந்து பணிமனைக்குத் திடீர் விசிட் அடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது என்பதைப் படக்குழுவே அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.
இதனிடையே ரஜினிகாந்த், இமயமலை, ஜார்க்கண்ட் உட்பட வடமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமயமலையில் ஆன்மிகப் பயணமாகத் தொடங்கிய அது, பின்னர் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் பயணமாகவும் மாறியது. இது குறித்த கேள்விக்கு, ‘இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே’ என்று அவரே விளக்கம் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தான் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூருவில் உள்ள பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார்.
சிவாஜி ராவாக அங்கு பணியாற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியோடு அங்குப் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது நண்பரான ராஜ் பகதூர் என்பவரையும் அழைத்துச் சென்று மலரும் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேலுடன் கைகோத்திருக்கிறார். ரஜினியின் இந்த 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.