25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

உலகின் முதல் சம்பவம்: அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள புழு கண்டுபிடிக்கப்பட்டது

64 வயதான அவுஸ்திரேலியப் பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள ஒட்டுண்ணிப் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நோயத்தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகும்.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) மற்றும் கான்பெர்ரா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், பெண்ணில் மூளைக்குள் 8 செமீ (3.15 அங்குலம்) வட்டப் புழு உயிருடன் இருப்பதைக் கண்டறிந்த பின்னர், அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அந்த புழு வெளியே எடுக்கப்பட்ட பின்னரும் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தது.

அந்த புழுவின் இளம் பருவங்கள் அந்த பெண்ணின் நுரையீரல் மற்றும் கல்லீரல் உட்பட உடலில் உள்ள மற்ற உறுப்புகளிலும் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வட்டப்புழு வகை புழுக்கள் ஒருவகையான பாம்பில் காணப்படுகிறது. ஆனால்
“உலகில் மனிதர்களில் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்” என்று தொற்று நோய் நிபுணரும் ஆய்வின் இணை ஆசிரியருமான சஞ்சய சேனாநாயக்க கூறினார்.

“எங்கள் அறிவைப் பொறுத்தவரை, மனிதனோ அல்லது வேறு எந்த பாலூட்டி இனத்தின் மூளையோ சம்பந்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். பொதுவாக வட்டப்புழுவிலிருந்து வரும் இளம் பருவ புழுக்கள் சிறிய பாலூட்டிகள் மற்றும் வயிற்றுப்பையில் குட்டி பேணும் சில விலங்குகளில் காணப்படுகின்றன, அவை மலைப்பாம்புகளால் உண்ணப்படுகின்றன, இந்த புழுக்களின் வாழ்க்கை சுழற்சி பாம்பில் முடிகிறது.” என்றார்.

அந்த பெண் தனது வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்திலுள்ள கீரைகள், ஒரு வகை நாட்டுப்புற புல் ஆகியவற்றை சேகரித்து சமைத்துள்ளார். அதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

புற்கள் மலைப்பாம்புகளின் வாழ்விடமாகும், அவை ஒட்டுண்ணியின் முட்டைகளை மலம் வழியாக வெளியேற்றும்.

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி வட்டப் புழுக்கள் கார்பெட் மலைப்பாம்புகளில் பொதுவாக காணப்படும். மலைப்பாம்பின் உணவுக்குழாய் மற்றும் வயிற்றில் வாழ்கின்றன.

தென்கிழக்கு மாநிலமான நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த அந்தப் பெண், பூர்வீக புல்லைத் தொட்டதிலிருந்தோ அல்லது அதை சாப்பிட்ட பின்னரோ பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கான்பெர்ரா மருத்துவமனையின் மருத்துவ நுண்ணுயிரியல் இயக்குநரும், ANU மருத்துவப் பள்ளியின் இணை பேராசிரியருமான கரினா கென்னடி, பெண்ணின் அறிகுறிகள் முதலில் ஜனவரி 2021 இல் தோன்றியதாகவும், மூன்று வாரங்களில் அவை மோசமடைந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“அவருக்கு ஆரம்பத்தில் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னோக்கிப் பார்த்தால், இந்த அறிகுறிகள் குடலிலிருந்து மற்றும் கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற பிற உறுப்புகளுக்கு வட்டப்புழுக்களின் இளம் பராயங்கள் இடம்பெயர்வதன் காரணமாக இருக்கலாம். சுவாச மாதிரிகள் மற்றும் நுரையீரல் பயாப்ஸி செய்யப்பட்டது; இருப்பினும், இந்த மாதிரிகளில் ஒட்டுண்ணிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“அந்த நேரத்தில், மனித நோய்த்தொற்றை ஏற்படுத்துவதாக இதுவரை அடையாளம் காணப்படாத நுண்ணிய இளம் பராய புழுக்களை அடையாளம் காண முயற்சிப்பது, வைக்கோலில் ஊசியைக் கண்டுபிடிப்பது போன்றது.”

2022 வாக்கில், அந்தப் பெண் மறதி மற்றும் மனச்சோர்வை அனுபவித்தார். இதனால், MRI ஸ்கான் செய்தார். அப்போது, அவரது மூளையில் ஒரு காயத்தைக் காட்டியது.

ஒரு மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆய்வு செய்தபோது, அவர்கள் புழுவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர், அதன் அடையாளம் ஒட்டுண்ணியியல் நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார் சேனநாயக்க.

“கடந்த 30 ஆண்டுகளில் உலகில் சுமார் 30 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. உலகளவில் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகளில், சுமார் 75 சதவீதம் ஜூனோடிக் ஆகும், அதாவது விலங்கு உலகில் இருந்து மனித உலகத்திற்கு பரவுகிறது. இதில் கொரோனா வைரஸ்களும் அடங்கும், ”என்று அவர் கூறினார்.

“இந்த ஓபிடாஸ்காரிஸ் தொற்று மக்களிடையே பரவாது, எனவே இது SARS, COVID-19 அல்லது எபோலா போன்ற தொற்றுநோயை ஏற்படுத்தாது. இருப்பினும், பாம்பு மற்றும் ஒட்டுண்ணிகள் உலகின் பிற பகுதிகளில் காணப்படுகின்றன, எனவே மற்ற நாடுகளில் வரும் ஆண்டுகளில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கலாம்“ என்றார்.

புழுவால் பாதிக்கப்பட்டு நிமோனியா நோயிலிருந்து முழுமையாக குணமடையாத பெண், தொடர்ந்து நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

Leave a Comment