சிங்கள இனவாதிகள் சிலரால் இந்த நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இனரீதியான பாகுபாட்டை முறுகலை ஜனாதிபதி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதும், பூகோள ரீதியில் இந்தியாவும் சீனாவும் இலங்கையைக் கையாள்வதைக் கூட பாம்புகுக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுவதைப் போல் இருப்பதும் இந்த நாட்டிற்கு சுபீட்சமானதாக இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடக சந்திப்பில் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இந்த நாட்டிலே மீண்டும் ஒரு இனக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் எமது மக்கள் மத்தியிலே உருவெடுத்திருந்தாலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய உளவுப் பிரிவும் தன்னுடைய அறிக்கையில் இலங்கையில் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.
ஒவ்வொரு தேர்தல்கள் வரும் போதும் இனவாதத்தைத் துண்டிவிட்டு அரசியற் செய்வது இந்த நாட்டிலே வழமையாகிவிட்டது. 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஒரு பிரளயத்தைக் கிளப்பி ஜனாதிபதி ஒருவரைக் கொண்டு வந்தார்கள். அதேபோன்று அடுத்த வருடம் எப்படியும் ஒரு தேர்தல் ஆண்டாகவே இருக்கப் போகின்றது. நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடந்தேயாக வேண்டும் என்கின்ற கட்டாயம் அரசியலமைப்பின் ஊடாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல்கள் கூட அடுத்த வருடங்களில் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
இதை மையமாக வைத்து ஒருசில சிங்கள இனவாதிகள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களது இல்லங்களைச் சுற்றி வளைக்க வேண்டும் என்றும், பௌத்தத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலே தமிழர்கள் செயற்பாடுகின்றார்கள் என்றும் இனத்துவேசத்தைக் கிளப்பி விடுவது மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது வீட்டின் முன்னால் இரண்டு நாட்கள் புத்த பிக்குகளும், உதயகம்மன்பில் பேன்ற இனவாத அரசியல்வாதிகளும் ஒரு ஆர்ப்பாட்டத்தைச் செய்திருந்தார்கள். இந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
உதயகம்மன்பில கூறுகின்றார் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பிலே சிங்களவர்களின் தலைநகரிலே தமிழர்களுக்கு என்ன வேலை என்று. அவர் ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ள வேண்டும்;. வடக்கு கிழக்கிலே நீங்கள் அடாத்தாக வந்து குடியேறுகின்றீர்கள், ஆனால் தெற்கிலே தமிழர்கள் அடாத்தாக வந்து குடியேறவில்லை. நீங்களே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை உணர்ந்தால் பாராளுமன்றத்திலே ஒரு பிரேரணையக் கொண்டு வந்து வடகிழக்கைப் பிரித்து அதனை ஒரு தனிநாடாக பிரகடணப்படுத்திவிட்டால் அனைவருக்கும் வசிதியாக இருக்கும்.
அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் நாட்களிலே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார் அத்துடன் சீனாவின் ஆய்வுக் கப்பலும் இலங்கைக்கு வரவிருக்கின்றதாகச் செய்திகள் கூறுகின்றன. மாறி மாறி பூகோள ரீதியாகவும், உள்ளுர் அரசியல் ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. இதைப் பார்க்கும் போது இலங்கைக்கு என்று ஒரு நிரந்தரமான உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் எதுவுமில்லாத ஒட்டுமொத்தத்தில் கொள்கையே இல்லாத அரசாங்கமாக இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் செயற்படுகின்றனரோ என்று தான் எண்ணத் தோணுகின்றது.
ஏனெனில் இந்த இனரீதியான பாகுபாட்டை முறுகலை ஜனாதிபதி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதும், பூகோள ரீதியில் இந்தியாவும் சீனாவும் இலங்கையைக் கையாள்வதைக் கூட பாம்புகுக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுவதைப் போல் இருப்பதும் இந்த நாட்டிற்கு சுபீட்சமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.