முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா மகாஜன கட்சியில் இருந்த போது, 1980 முதல் 1990 வரை மொத்தம் 104 துப்பாக்கிகள்(12 போர் ரகம்) வழங்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்கள் இன்னும் மீள ஒப்படைக்கப்படவில்லை என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
1980 முதல் 1990 வரையான காலப்பகுதியில் 154 அரசியல்வாதிகளுக்கு 698 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அவை கையளிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆவணத்தின்படி, அந்த தசாப்தத்தில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும், அனைத்து ஆயுதங்களும் 1988 ஆம் ஆண்டு திருமதி குமாரதுங்கவினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 41 அரை தானியங்கி 9mm கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர் மற்றும் 656 12-போர் துப்பாக்கிகள் இன்றுவரை திரும்பப் பெறப்படவில்லை என்றும் அது கூறியது. தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பிக் கொடுக்கத் தவறிய கணிசமான அரசியல்வாதிகள் தற்போது உயிரிழந்துள்ளனர்.
12 போர் துப்பாக்கிகளைத் திருப்பிக் கொடுக்கத் தவறிய முன்னணி அரசியல்வாதிகளில் எச்.எஸ்.ஏ. கருணாரத்ன (நிர்வாகச் செயலாளர் –லங்கா சமசமாஜக் கட்சி -16), அலிக் அலுவிஹாரே (5), பீட்டர் கெயூன்மன் (1), பி தயாரத்ன (05), டியூடர் ஜயரத்ன (5), டைரோன் பெர்னாண்டோ (5), நந்தா மேத்யூ (5), கமின் அத்துகோரல (5) ஆகியோர் உள்ளடங்குகிறார்கள்.
இது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார். எவ்வாறாயினும், இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் வரை தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினருக்கு (எஸ்ஐஎஸ்) அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜேவிபி எழுச்சியின் போது, ஸ்ரீலங்கா மகாஜன கட்சியினர் அதிகமாக குறிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.