கடந்த 24ஆம் திகதி வவுனியாவின் இரண்டு பிரதேசங்களிலுள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளை சுற்றிவளைத்து, அனுமதியற்ற மருத்துவத்தில் ஈடுபட்ட இருவரை வவுனியா பொலிஸாரும் சுகாதார சேவையினரும் கைது செய்தனர்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து வவுனியா நெளுக்குளம் மற்றும் சிதம்பரபுரம் பகுதிகளில் இயங்கி வந்த இந்த இரண்டு தனியார் வைத்தியசாலைகளும் சோதனையிடப்பட்டன.
நெளுக்குளம பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை, மருந்து விற்பனை நிலையமாகவும் இயங்கி வந்ததாகவும், அதற்கான உரிமம் உரிமையாளரிடம் இல்லை என்றும் வவுனியா சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வைத்தியசாலையில் இருந்து ஐம்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் வைத்தியசாலையின் பெயர் பலகையில் ஆயுர்வேத வைத்தியசாலை என காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அந்த வைத்தியசாலையில் ஆங்கில சிகிச்சையும் வழங்கப்பட்டது.
மருத்துவமனையில் மருந்துகளை சேமித்து வைப்பதற்கான உரிமமோ, வசதியோ இல்லாத நிலையிலும், அதிக அளவில் வலி நிவாரணி மாத்திரைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிஸாரும் சுகாதார சேவை அதிகாரிகளும் இணைந்து அனுமதியற்ற மருத்துவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளனர்.