குருந்தூர் மலையில் தமிழர்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டபோது, சிங்கள இனவாதிகள் ஏற்படுத்திய அமைதியின்மை பற்றி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இன்று (25) நாடாளுமன்றத்தில் புதுக்கதையொன்றை தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நாட்டில் ஏற்படக்கூடிய இன மற்றும் மத கலவரங்கள் குறித்து சர்வதேச புலனாய்வு சேவைகள் அரசாங்கத்திற்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் தூண்டுதலுடன் நாட்டில் சில இடங்களில் இன மற்றும் மத கலவரத்தை ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக உள்ளுர் புலனாய்வு சேவைகள் இனங்கண்டுள்ளதாகவும், அரசாங்கம், பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
முல்லைத்தீவில் வசிக்கும் கத்தோலிக்கர் ஒருவர் குருந்தூர்மலை சம்பவத்திற்கு விஷேட அக்கறை செலுத்தி அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரால் வெளிப்படுத்தப்பட்ட மத மற்றும் இன மோதல் சாத்தியம் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் அண்மைக்காலமாக வெளியான செய்திகள் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்புக்களுக்கும் விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் வெடிப்புகள் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் மத மற்றும் இனக் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவுகளை மேற்கோள் காட்டி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தேசிய பாதுகாப்பை பாதிக்கும் ஒரு பாரதூரமான விடயம் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஊடக அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் விளக்கமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.