மன்னார் – அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்திருந்தனர்.
மன்னார், நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (56) ஆகிய இரு குடும்பஸ்தர்களே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் இன்று (24) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது, கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பழிவாங்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவரை கொல்வதற்காக வந்தவர்கள், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பக்கத்து வயல்காரரையும் கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதேவேளை, இந்த கொலைக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு தரப்பின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைய வருடங்களில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொலைகளுக்கு உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இந்த கொலைகளுக்கு 9எம்எம் கை கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
2009 யுத்தம் முடிந்த பின்னர், வடக்கில் உள்ளூர் தகராறொன்றில் தொழில்முறை துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முதலாவது கொலையாக இது கருதப்படுகிறது.
அத்துடன், இந்த கொலைக்காக ஒப்பந்த கொலையாளிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.