முன்னாள் பொலிஸ் மா அதிபரும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான சந்திரா பெர்னாண்டோவின் பம்பலப்பிட்டி இல்லத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் அகற்றப்பட்டமை தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என பம்பலப்பிட்டி காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் பாதுகாப்புச் சாவடிக்கு அருகாமையில் இரண்டு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், நாளாந்தம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்புக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20ஆம் திகதி அதிகாலை இந்தத் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஓகஸ்ட் 19 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி காலை 6 மணி வரை ஒரு பயிலுனராக பொலிஸ் கான்ஸ்டபள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஓகஸ்ட் 20 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு கடமையை பொறுப்பேற்க மற்றொரு பொலிஸ்காரர் சென்றபோது, பயிலுனர் கான்ஸ்டபள் கடமையில் இருக்கவில்லையென்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இரு கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் திருடப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று முன்தினம் பணியில் இருந்த பயிலுனர் கான்ஸ்டபள், காவலர் இல்லத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
பயிலுனர் கான்ஸ்டபளிடம் விசாரணை நடத்திய போது, தான் கடமையில் ஈடுபட்டுவிட்டு, அன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் படைமுகாமிற்கு சென்று தூங்கியதாக தெரிவித்திருந்தார். ஓகஸ்ட் 20ம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை காவலர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
தனது கடமைகளை முடித்து, மற்றொருவரிடம் அதனை ஒப்படைக்காமல் தூங்கச் சென்ற பயிலுனர் கான்ஸ்டபய் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.