மஹரகம பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று காலை நாவின்ன பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலகல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நாவின்ன பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு கடனாக பணம் கொடுத்து அதனை பெற்றுக் கொள்வதற்காக நேற்றைய தினம் மற்றுமொரு நபருடன் முச்சக்கர வண்டியில் குறித்த நபரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
மூடியிருந்த கேட்டை தட்டி திறக்க முயன்ற போது வீட்டு உரிமையாளரான கடன் வாங்கிய நபர் கூரிய ஆயுதத்துடன் வந்து இருவரையும் தாக்கியுள்ளார்.
பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கர வண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை மீட்பதற்காக உயிரிழந்த நபர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிப்பவரான 60 வயதுடைய சந்தேக நபர், வீட்டை விட்டு ஓடிய வேளையில் ஹோகந்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.