முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் இன்று பெருமளவான சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு சமய அனுட்டானங்கள் நடைபெறுகிறது.
தமிழ் பௌத்த வழிபாட்டிட எச்சமான முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், இராணுவ மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன், தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன், பௌத்த பிக்குகளால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான சிங்கள பௌத்த வழிபாட்டிடத்தில் இந்த அனுட்டானங்கள் நடந்தன.
இன்று (18) குருந்தூர் மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட தமிழ் மக்களிற்கு ஆலய நிர்வாகம் அழைப்பு விட்டிருந்தது.
அறுவடை முடிந்த பின்னர் ஆதிசிவனிற்கு பொங்கலிடுவது அந்த பகுதி மக்களின் பண்டைய வழக்கம். எனினும், கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம், பாதுகாப்பு தரப்பின் அனுசரணையுடன் பிக்குகள் அதனை தடுத்து வந்தனர்.
இம்முறையும் அந்த தரப்பின் தடைகளை தகர்த்து, நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் இன்று பொங்கல் நடந்து வருகிறது. இதற்கு ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களை விகாரையில் திரளுமாறு பௌத்த பிக்குகள் அழைப்பு விடுத்ததுடன், பேருந்துகளில் மக்களை அழைத்து வந்துள்ளனர்.