மன்னாரை புதிய நகரமாக கட்டமைக்கவும், பூநகரியை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட மடு திருவிழா காலை ஆராதனையில் கலந்து கொண்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எமது உள்ளூர் கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். எனவே, இந்த விழாவை தேசிய விழாவாகக் கருதி, இதைப் பாதுகாத்து, தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு.
அத்துடன், வருடாந்த மடு திருவிழாவை நடாத்துவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து பிதாக்களுக்கும் அரசாங்கத்தின் சார்பாக எனது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து மடு மாதாவிடம் பிரார்த்தனை செய்து நிவாரணம் பெறுகின்றனர். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் உதவியையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த இக்கட்டான நேரத்தில் மடு அன்னையின் ஆசீர்வாதம் எங்களுக்கு பலத்தை அளித்தது என்றே சொல்ல வேண்டும். அன்னை வாழும் மன்னாரின் இந்தப் பகுதி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெற்ற பகுதியாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை ஆற்றல் மையமாக உருவாக்க முடியும். பூநகரியை எரிசக்தி நகரமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புண்ணிய பூமியும் காடுகளும் பாதுகாக்கப்படும் வகையில்தான் இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் செய்யப்படுகின்றன என்பதைச் சொல்ல விரும்புகிறேன். அத்துடன், இப்பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் ஆயரிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தலைமன்னாரிலிருந்து கொழும்புக்கு நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.யின் கோரிக்கைக்கு அமைவாக நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியாவில் சீனி தொழிற்சாலையை நிறுவவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் விரைவான வளர்ச்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளுடனும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவோம் என நம்புகின்றோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என்றார்.