27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்கள் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நான் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நாடு இருக்கிறது. அங்கு அமைதி நிலவ வேண்டும். அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இம்முறை இயற்கைப் பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று, நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை உள்ளன. இவை, தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த ஆயிரம் ஆண்டுகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில், நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன். இந்த காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதும், நாம் நமது அடிகளை எவ்வாறு வைக்கிறோம் என்பதும், ஒன்றன்பின் ஒன்றாக நாம் எவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதும் வரும் ஆயிரம் ஆண்டுகளில் நாடு பொன்னான காலத்தைப் படைக்கும்.

நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய உலக வரிசை, புதிய புவிசார் அரசியல் உருவாகி வருகிறது. 140 கோடி மக்களின் திறன், உலக வரிசையை மாற்றி வருவதை காணலாம். இந்தியாவின் திறன் மற்றம் சாத்தியக்கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. ஜி 20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஜி 20 அமைப்பின் பல்வேறு நிகழ்வுகள் நடந்த விதம், இந்தியாவின் எளிய மக்களின் திறனையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றி வருகின்றன. 2014ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. 140 கோடி மக்களின் முயற்சியால் நாம் தற்போது 5வது இடத்திற்கு வந்துவிட்டோம். நாட்டை தன் பிடிக்குள் வைத்திருந்த ஊழல் அரக்கனைத் தடுத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.

பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்காக விஸ்வகர்மா எனும் திட்டத்தை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இத்திட்டம் ரூ. 13 ஆயிரம் கோடி முதல் ரூ. 15 ஆயிரம் கோடி வரையிலான திட்டமாக இருக்கும். கோவிட் பெருந்தொற்றில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. போர் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று உலக பணவீக்கம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் தன் பிடியில் வைத்துள்ளது. நமக்குத் தேவைக்கேற்ப பொருட்களை இறக்குமதி செய்யும்போது பணவீக்கத்தையும் இறக்குமதி செய்வது துரதிருஷ்டவசமானது. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. உலகின் மற்ற நாடுகளைவிட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தி அடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை குறைய அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும்.

உறுதியான இந்தியா தனக்கான பணிகளை சிறப்பாக நிறைவேற்றுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படும் என்று 25 ஆண்டுகளாக நாட்டில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய அரசு அதை கட்டி முடித்திருக்கிறது. இது வேலை செய்யக்கூடிய, இலக்குகளை அடையக்கூடிய அரசு. இது புதிய இந்தியா. இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். இன்று, சிவில் ஏவியேஷன் துறையில் அதிக விமானிகளை இந்தியா கொண்டுள்ளது என்று பெருமையுடன் கூறலாம். பெண் விஞ்ஞானிகள் சந்திரயான் பணியை முன்னெடுத்து வருகின்றனர். ஜி 20 நாடுகளும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றன.

எல்லை கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. அந்த எண்ணத்தை மாற்றியுள்ளோம். அவை நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல. எல்லையில் நீங்கள் பார்ப்பது எனது முதல் கிராமம். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்றிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக செங்கோட்டைக்கு வந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் தேசிய தன்மையே வளர்ந்த நாடாக மாறுவதற்கு மிகப்பெரிய ஊக்கியாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில், நாம் ஒற்றுமை என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டும். இவ்வாறு பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment