திருமணமாகி கணவருடன் 25 நாள்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில், தன்னை விட்டுச் சென்ற போலீஸ் கணவருடன் சேர்ந்து வாழ, அவரது வீட்டு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் தற்கொலை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தென்காசி மாவட்டம், கல்லூரணி வ.உ.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை- கிருஷ்ணவடிவு தம்பதியின் மகள் குமுதா. சில வருடங்களுக்கு முன்பு சின்னதுரை இறந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் குமுதாவும் அவரின் சகோதரி, சகோதரர் ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குமுதாவுக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று குமுதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமான 25 நாள்களுக்குப் பின்னர் சென்னையில் போலீஸாகப் பணியாற்றிய சுதர்சன், வேலைக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அப்போது சென்னையில் வாடகை வீடு பார்த்த பின்னர் குமுதாவை அழைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார். அதை நம்பி குமுதா காத்திருந்திருக்கிறார். ஆனால், சுதர்சனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால், குமுதா அவரை தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது சுதர்சன் அவரிடம் பேசவில்லை எனத் தெரிகிறது.
தொடர்ந்து சுதர்சனை அவர் தொடர்புகொள்ள முயற்சி செய்து வந்த நிலையில், ஒருநாள் போனை எடுத்த சுதர்சன், “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. நான் வேறொரு பெண்ணை விரும்புகிறேன். அவரையே கல்யாணம் செய்ய முடிவுசெய்திருக்கிறேன். நீ என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த குமுதா, தன் தாயிடம் இந்தத் தகவலைச் சொல்லி அழுதிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த குமுதாவின் உறவினர்கள், சுதர்சன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனாலும் சுதர்சன் தன் மனைவியுடன் சேர்ந்து வாழப்பிடிக்காமல் இருந்திருக்கிறார். அதனால் குமுதா தன் தாயார் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்திருக்கிறார். பல மாதங்களாகியும் கணவன் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால், இது குறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
கணவனுடன் தன்னைச் சேர்த்து வைக்கக் கோரி சுதர்சனின் பெற்றோரிடம் சென்று இரு தினங்களுக்கு முன்பு குமுதா முறையிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் இது பற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததால், அதிருப்தியடைந்த அவர், கணவனின் வீட்டு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வந்திருக்கிறார். அவருக்குத் துணையாக தாய் கிருஷ்ணவடிவும் இருந்திருக்கிறார்.
குமுதா தன் கணவரின் வீட்டு முன்பாக இருந்த நிலையில், கணவரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் பூட்டிய வீட்டின் முன்பாக அவர் போராட்டம் நடத்தியிருக்கிறார். அதன் பின்னரும் கணவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் மன அழுத்தத்துக்குள்ளான குமுதா, மிகுந்த ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார்.
போலீஸ்கார கணவன் தன்னுடன் 25 நாள்கள் மட்டும் வாழ்ந்துவிட்டுப் பிரிந்து சென்றுவிட்ட துயரத்தால் மிகுந்த வேதனைக்குள்ளான குமுதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலறிந்த உறவினர்கள், அவரது வீட்டு முன்பாக திரண்டனர். பின்னர் அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுதர்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாவூர்சத்திரம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் குமுதா உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீஸார், விசாரணை நடத்திவருகிறார்கள். திருமணமான 6 மாதங்களுக்குள் குமுதா தற்கொலை செய்துகொண்டது குறித்து தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா விசாரணை நடத்திவருகிறார்.