தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான- முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தர். அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.
இது குறித்து அப்பொழுது, கட்சி தலைவர் என்.சிறிகாந்தாவை தமிழ்பக்கம் வினவியபோது, அதற்கு ஒருநாள் முன்னதாகவே சிவாஜிலிங்கம் நாடு திரும்பியதாகவும், அவரையும் அழைத்து வார (கடந்த) இறுதியில் கட்சி தலைமைக்குழு கூட்டத்தை கூட்டவுள்ளதாகவும், அதில் சிவாஜிலிங்கத்திடம் விளக்கம் கோரப்படும் என்றார்.
பின்னர், சிவாஜிலிங்கம் பதவியை துறக்காகத பட்சத்தில், அவர் கட்சியை விட்டு நீக்கப்படும் முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று கட்சித் தலைவர் என்.சிறிகாந்தாவின் வீட்டில் நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில், சிவாஜிலிங்கம் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் கட்சியின் பொறுப்பிலிருந்து அறிக்கைகள் விடுவது கட்சியை சங்கடப்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சித் தலைமை குறிப்பிட்டது.
தமிழ் பக்கம் ஏற்கெனவே வெளியிட்ட செய்தியில் சிவாஜிலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தோம். எனினும், கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டார். அவர் கட்சியின் சாதாரண உறுப்பினராக இருந்து செயற்பட விரும்பினால் செயற்படலாம், அல்லது கட்சியை விட்டு வெளியேறலாம் என்றே குறிப்பிடப்பட்டது.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.