முன்விரோதம் காரணமாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய தபாலக வீதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு வேறு போதைப்பொருளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இரு குழுக்களே மோதலில் ஈடுபட்டுள்ளதுடன் ஒரு குழுவின் அங்கத்தவர்கள் குறித்த வீட்டினுள் அத்துமீறி தாக்கியதுடன் உடமைகளையும் அடித்து நொறுக்கினர்.
மேலும் அவ்வீட்டில் இருந்த குழுவின் முக்கிய உறுப்பினர்களையும் அடித்தும் வெட்டியும் காயப்படுத்தி தப்பி சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உரிமையாளர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த தாக்குதலில் ஒரே குழுவை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதுடன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு குழுக்களிலும் உள்ள நபர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினராலும் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையானவர்கள் என்பதும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
-பாறுக் ஷிஹான்-