திருமணத்திற்கு தயாராகிய இளைஞன் ஒருவரை, திருமணத்திற்குப் பயன்படுத்தப்படும் காரைக் காட்டுவதற்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, கடத்திச் சென்ற பெண் மற்றும் இராணுவ வீரர் உட்பட மூவரை அவிசாவளை பொலிஸார் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளனர்.
இளைஞனை கடத்திச் சென்றவர்கள், அவரை ஆறு மணி நேரம் தடுத்து வைத்தி, அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவு பற்றிய தகவல்களைக் கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர்.
கைதான பெண் இராணுவ வீரரின் 50 வயதுடைய தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாய் மற்றும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ சிப்பாயின் சகோதரிக்கு கடத்தப்பட்ட இளைஞடன் இரகசிய தொடர்பு இருப்பதாகவும், இளைஞனின் கையடக்கத் தொலைபேசியில் இந்த விவகாரம் தொடர்பிலான பல ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தைப் பெறுவதற்காகவே இந்த கடத்தல் இடம்பெற்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், அவரது திருமண பயணத்திற்கு தேவையான கார் ஒன்றை தருவதாக கூறி இராணுவ சிப்பாய் அவரை அழைத்து வந்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் தல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர். 25 வயதுடைய இளைஞரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 26 வயது. இவர் தல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் முல்லைத்தீவில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.