“நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அவருக்கு என்னைத் திட்ட முழு உரிமையும் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் நடிகர் ராஜ்கிரணின் சமூக வலைதளப் பதிவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிஏஏ, என்ஐஏ உள்ளிட்ட பிரச்சினைகளில் ராஜ்கிரண் என்னுடன் நின்று போராடினாரா? முத்தலாக் தடை சட்டத்துக்கு வந்து வீதியில் இறங்கி போராடினாரா? தேசத் துரோக வழக்கை வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான். அவர் முழுப்பேச்சையும் கேட்டாரா என்பது எனக்கு தெரியாது. அதில் நான் என்ன பேசினேன் என்பதை அவர் முழுமையாக கேட்க வேண்டும். ஒரு துண்டு காணொலியை பார்த்து முடிவு செய்யக்கூடாது. அவர் அண்ணன், அவருக்கு என்னை திட்டவும், என்னிடம் கோபித்துக்கொள்ளவும் முழு உரிமை இருக்கிறது. பேசிவிட்டுப் போகட்டும்” என்றார்.
முன்னதாக நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதள பக்கங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியிருந்த சீமான் குறித்து கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.
“இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்” பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.