சமஸ்டி விவகாரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தனிச்சொத்தல்ல. சமஸ்டியை கோரியைத்தான் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆரம்பித்தது. அனைத்து கட்சிகளும் ஓரணியில் மாகாணசபை தேர்தலை வைக்க கோரலாம். அதில் உடனடியாக சமஸ்டி கேட்பவர்கள் ஓரணியாக நின்றும், படிப்படியாக- 13ஆம் திருத்தத்தின் அடுத்ததாக- சமஸ்டி கேட்பவர்கள ஓரணியாகவும் தேர்தலில் போட்டியிடலாம். இது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பாக அமையும் என தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு இதனை தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கே தலைவரொழிய சஜித் பிரேமதாசா எனக்கு தலைவர் அல்ல என்றார்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், தலைமறைவாக திரிந்த ராஜபக்ச கும்பல் மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கிறார்கள். மக்களை அழைத்து வந்து – அது தானாக வந்த கூட்டமல்ல- கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், பொதுஜன பெரமுனவுக்குள் இப்பொழுது ரணில் அணி உருவாகி விட்டது. பெரமுனவின் இளம் எம்.பிக்கள் முன்னர் நாமலுடன் திரிந்தபடி தேசியவாதம் பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது கோட், சூட் அணிந்தபடி ரணிலுடன் ஐக்கியமாகி விட்டனர் என்றார்.