27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

ஹரியாணா கலவர பலி 6 ஆக அதிகரிப்பு

ஹரியாணாவில் திங்கள்கிழமை வெடித்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. போலீசார் இதுவரை 116 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஹரியாணாவில் நடந்த வகுப்புவாத வன்முறையானது, தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிமீ தள்ளியுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதன் காரணமாக டெல்லியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தால் மிகுதியாக பாதிக்கப்பட்ட குருராமின் சோஹ்னா பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா கலவரம் தொடர்பான அண்மைத் தகவல்கள்:

♦ ஹரியணாவின் நு பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் கண்ட போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேவாட் பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மானேசர் பகுதியில் உள்ள பீசம் மந்திரில் மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

♦ நு பகுதி வன்முறையைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) வன்முறை கும்பல் ஒன்று குருராமிலுள்ள பாட்ஷாபூரில் வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள உணவகத்துக்கு தீ வைத்தது. தொடர்ந்து அருகில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகளை குறிவைத்து தாக்கிய அந்த வன்முறை கும்பல் மசூதிக்கு முன்பு “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டனர். வன்முறையைத் தொடர்ந்து பாட்ஷாபூர் சந்தை மூடப்பட்டது.

♦ குருகிராமில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லி உஷார்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தெரிவித்த போலீசார், சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

♦ நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்த வன்முறையின் தாக்கம் டெல்லியில் பரவாமல் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தலைநகரை அடுத்துள்ள பகுதிகளில் நடந்த வன்முறையால் டெல்லியில் ஏதாவது கலவரம் ஏற்படுமானால், அதைத் தடுக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார். டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘டெல்லியில் பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

♦ குருகிராம் பகுதியில் நடந்த வன்முறையினைத் தொடர்ந்து அங்குள்ள பெட்ரோல் பங்க்-களில் வாகனங்களுக்கு இல்லாமல், பாட்டில்கள் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு குருகிராம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

♦ நு வன்முறையில் உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர்களுக்கு ரூ 57 லட்சம் நிவாரணமாக ஹரியாணா போலீஸ் அறிவித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

♦ வன்முறை குறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், நூ வன்முறை ஒரு சதிச்செயல் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

♦ ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சிங் சவுதாலா கூறுகையில், “மேவாட் மக்கள் எப்போதும் இந்தியாவுடன் உறுதுணையாக இருந்துள்ளனர். முகலாயர்கள் இந்தியாவைத் தாக்கியபோதும், இந்திய சுதந்திரத்துக்காகவும் மேவாட் மக்கள் இந்தியாவுடன் உறுதியாக இருந்து போராடினர்” என்று தெரிவித்துள்ளார்.

கலவரத்தின் பின்புலம்

ஹரியாணா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடைபெற்றது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நு மாவட்டத்திலுள்ள நள்ஹார் மகாதேவ் கோயிலில் முடிவடைவதாக இருந்தது. கேட்லா மோட் பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஒரு கும்பல் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தது. மேலும், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.

இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த வன்முறையில் இருந்து தப்புவதற்காக 2,500 பேர் அருகில் உள்ள கோயில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதொடர்பான பொய்யான செய்திகள் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தில் இன்று வரை (2) இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. பின்னர், குருகிராமின் சோனாவிலும் வன்முறை பரவியுள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான 4 வாகனங்கள், ஒரு கடை தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த மசூதி ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 முஸ்லிம்களை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் ஊர்வலத்தில் பங்கேற்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுவே வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 2 போலீஸார், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்றும் பல பகுதிகளில் புதிதாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குருகிராம் செக்டார்-66-ல் 7 கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 14 கடைகள் சூறையாடப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

Leave a Comment