கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்திக்காக அரிசி இருப்புக்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
நிலவும், கடுமையான வறட்சி நிலை காரணமாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க, தற்போதைய அரிசி இருப்புகளைப் பாதுகாக்க அமைச்சர் இந்த உத்தரவை விடுத்தார்.
இந்த முடிவை வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் ஜனாதிபதியின் உணவுப் பாதுகாப்புக் குழுவுக்குத் தெரிவிக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வறட்சியின் காரணமாக நாசமடைந்துள்ளன. மேலும் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் தற்போது 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கை நீர் இன்மையால் அழிவடையும் அபாயத்தில் உள்ளது. இந்த நெல் வயல்களுக்கு இன்னும் இரண்டு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
அநுராதபுரம் மாவட்டத்திலும் நெற்செய்கைகளுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால், எதிர்வரும் காலங்களில் சிறுபோகத்தில் எதிர்பார்த்த நெல் அறுவடை தோல்வியடைந்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.