யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி விவகாரத்தில் பல்வேறு வதந்திகளும், ஊகங்களும், பரபரப்புக்களும் கிளப்பப்பட்டு வருகின்றன. அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் என்றெல்லாம் திடீரென தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
சொர்க்கமும், நரகமும், இன்பமும், துன்பமும், கல், மலை, பனிக்கட்டி, பணம் என பௌதீக பொருட்களாகவும், உணர்வுகளாகவும் அனுபவிக்க நிறைந்துள்ள இந்த உலகத்தில், மகிழ்ச்சியின் ஒரு கணத்தையேனும் அறியாமல் அடுப்பங்கரைக்குள் வாழ்வு முடிந்த 17 வயது சிறுமியின் மரணம், ஒவ்வொரு மனிதனையும் கலங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், ஆர்வமிகுதியில்- முறையாக பரிசோதனை முடிவுகள் வரும் முன்னர்- தற்போது கிடைத்த விசாரணை அறிக்கைகளுக்கு முரணாக- சிறுமி கொலை செய்யப்பட்டார், பாலியல் தொல்லைக்குட்பட்டார் என கதை பரப்புவதும் சிறுமிக்கு இழைக்கப்படும் மிப்பெரிய அநீதி. மிகப்பெரிய குற்றம்.
உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை, கர்ப்பமாக இல்லையென்பதே பிரேத பரிசோதனை முடிவு.
தூக்கில் தொங்கிய சடலம்
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி மாலை கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி, அவர் பணிபுரிந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கல்வியங்காடு, சட்டநாதர் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அந்த வீடு வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது. தற்போது வாடகைக்கு தாதிய உத்தியோகத்தரான பெண்ணொருவர் வசிக்கிறார். அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள Allied health science நிறுவனமொன்றில் வருகைதரு விரிவுரையாளராக உள்ளார்.
அவரும், இரண்டு சிறிய பிள்ளைகளும் வீட்டு மாடியில் வசிக்கிறார்கள். அவரது வயதான பெற்றோர் வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கிறார்கள்.
அந்த வீட்டின் பின் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த சமையலறை போன்ற பகுதியில் சிறுமி துணியினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும், சிறுமியின் உறவினர்களும், பிரதேசவாசிகளும் வீட்டை முற்றுகையிட்டனர். பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, யாரையும் சடலத்தை பார்க்க அனுமதிக்கவில்லை. சிறுமியின் பெற்றோரை மட்டுமே, சடலத்தை பார்க்க அனுமதித்தனர்.
வீட்டின் வெளியில் கூடியிருந்தவர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அது கொலையா, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானாரா என கொந்தளிக்க தொடங்கினர்.
பெற்றோரின் சந்தேகம்
தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுமியின் கால்கள் இரண்டும் தரையில் காணப்பட்டன. இன்னும் குறிப்பக சொல்வதெனில்- சிறுமியின் உயிரற்ற உடலின் கழுத்தில் தூக்கு மாட்டிய துணி காணப்பட்டது. சிறுமியின் இரண்டு முழங்கால்களும் தரையில் முட்டிக் கொண்டிருந்தன.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி, பார்த்தவர்கள் பலருக்கு, அது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. இயல்பாகவே அறச்சீற்றத்துடன், சமூக கொடுமைகளை தட்டிக்கேட்கும் இந்தியன் தாத்தாவாக சமூக ஊடகங்களில் வலம் வரும் பலரும்- கல்வியங்காட்டில் பணிப்பெண் கொல்லப்பட்டார் என சமூக ஊடகங்களில் தீர்ப்பெழுத ஆரம்பித்தனர். அதிலும், இன்னும் சற்று உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், அந்த வீட்டில் யாராவது ஒரு ஆண் இருந்து, அந்த பெண்ணுக்கு “ஏதும்“ நடந்திருக்குமா என ஆராயத் தொடங்கியிருந்தனர்.
தமது மகளின் சடலமாக காணப்பட்ட போது, முழங்கால்கள் தரையில் ஊன்றியிருந்ததன் அடிப்படையில், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனை முடிவு
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனையில், அது தற்கொலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமி துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் உடலில் தென்படவில்லை. சிறுமியின் உடலில் காயங்களும் இருக்கவில்லை. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கவில்லை. கர்ப்பமாகவும் இருந்திருக்கவில்லை.
ஒருவரை தூக்கிலிட்டு கொலை செய்வதற்கான வாய்ப்பு மிகமிக அரிதானது. அதிலும் குறிப்பாக எந்த தடயமும் இல்லாமல் தூக்கிலிட்டு கொல்வது என்பது சாத்தியமேயில்லை. கொலையாளியுடன் அவர் போராடியிருப்பார். குறைந்தபட்சம் நகங்களிலேனும் தடயங்கள் இருக்கும். உடலில் காயங்களிலிருக்கும்.
பொதுவாகவே, கழுத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்படுபவை தற்கொலை மரணங்கள்தான். கொல்லப்பட்ட பின் தூக்கில் தொங்கவிடப்பட்ட சடலங்களில், தெளிவான சான்றுகள் இருக்கும்.
கனடா போன்ற சில நாடுகளில், தூக்கில் இருந்து மீட்கப்படும் உடல்களை வழக்கமாக சி.ரி. ஸ்கான் மட்டுமே செய்வதாகவும், பிரேத பரிசோதனைக்குட்படுத்துவதில்லையென்றும் சட்ட வைத்தியத்துறையினர் தெரிவித்தனர். ஒருவரை தூக்கில் தொங்கவைத்து கொல்ல வாய்ப்பில்லை (ஆதாரம் இல்லாமல்), தூக்கிலிருந்து மீட்கப்படுபவை தற்கொலைகளே என்பதன் அடிப்படையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில்லையென சட்டவைத்திய துறையினர் தெரிவித்தனர்.
கல்வியங்காட்டு சிறுமி மரணத்தில் மற்றொரு கோணமும் உள்ளது. சிறுமி நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் தூக்கில் தொங்க வைக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் எழலாம் அல்லவா. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி நஞ்சூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தின் உணர்வுபூர்வ முக்கியத்துவம் கருதி, சிறுமியின் இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
சிறார் தொழில் சட்டங்கள்
18 வயதுக்கு குறைந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குற்றம் என சமூக ஊடகங்களில் பரவலாக நீதிகோரப்பட்டதை அவதானிக்க முடிந்தது. என்றாலும், இலங்கை சட்டங்களின் அடிப்படையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டு பணிக்கு அமர்த்துவது குற்றமல்ல.
16 வயது வரையிலான கட்டாய பாடசாலை கல்வி என்ற ரீதியிலான சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வகையில் தொழில் கட்டளைச் சட்டத்தில் ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தும் ஆக குறைந்த வயது 16 ஆக அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2020 ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்கு உட்பட்டவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு கட்டு்ப்பாடுகள் உள்ளன. அண்ணளவாக 70 வகையான வேலைகளில் ஈடுபடுத்த முடியாது. குறிப்பிட்ட மணித்தியால ஓய்வு, குறிப்பிட்ட மணித்தியாலங்களில் வேலையில் ஈடுபடுத்த முடியாது என்ற விதிமுறைகள் உள்ளன.
அந்த விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை அறிய இப்பொழுது வாய்ப்பில்லை. காரணம், சிறுமி உயிருடன் இல்லை. வேலையிடத்தில் துன்புறுத்தப்படுவதாக சிறுமி தனது பெற்றோரிடமோ வேறு யாரிடமோ கூறியிருக்கவுமில்லை.
இந்த விவகாரத்தில் சிறுமியை தொழிலுக்கு அமர்த்தியவர்கள் சட்டரீதியான நெருக்கடிக்குள்ளாக வாய்ப்பில்லை. அவர்கள் அறவுணர்வு சார்ந்த சில கேள்விகளையே முகம் கொடுக்க வேண்டும்.
சிறுமியின் துயரப் பின்னணி
வட்டுக்கோட்டை, முதலிகோயிலடியை சேர்ந்த 16 வயதும் 8 மாதங்களுமான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமியே உயிரிழந்தவர். தர்மிகா 2006.11.03 இல் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியுடைய இந்த பகுதியில் வறுமை தலைவிரித்தாடுகிறது. வேலையின்மை, கல்வியறிவின்மை அங்குள்ள பிரதான பிரச்சினைகள்.
சிறுமியின் தாய் தற்போது 2வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 2 பிள்ளைகள் உள்ளனர்.
சிறுமியின் குடும்பம் சிறிய குடிசை வீடொன்றில் வசிக்கிறார்கள். சிறுமியும் அந்த வீட்டில் தங்கினால், அனைவரும் நிம்மதியாக படுக்கவும் இடவசதியற்ற குடிசை.
தாயாரின் இரண்டாம் தார கணவன் கூலி வேலை செய்கிறார். சிறுமியின் மரணத்தின் பின்னர், நடந்த விசாரணைகளில் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்வதாக தெரியவில்லை என ஒரு அதிகாரி குறிப்பிட்டார். ஏன் வேலைக்கு செல்வதில்லையென வினவியபோது, “முன்னர் போல நிலைமை இல்லை. 2000 ரூபா தான் சம்பளம். சாப்பாடும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது“ என குறிப்பிட்டாராம்.
உயிரிழந்த சிறுமியின் பிறந்த நாள் விபரங்களை பெரும் சிரமப்பட்ட பின்னரே பொலிசார், உறுதி செய்தனர். குடும்பத்திலிருந்து அதை பெறுவதில் சிரமங்கள் இருந்துள்ளது.
உயிரிழந்த சிறுமி தனது 14 வயதிலிருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார். 2021ஆம் ஆண்டு பாடசாலையிலிருந்து இடைவிலகி வீட்டுப் பணியாளராக இருக்கிறார். சிறுமியை கொழும்புக்கு படிக்க அனுப்பப் போவதாக கூறி, பெற்றோர் பாடசாலையிலிருந்து விடுகை பத்திரம் பெற்றுள்ளனர். சிறுமி பாடசாலையிலிருந்து விலகிய பின்னர், தகவலறிந்து கிராமசேவகர் வீட்டுக்கு சென்ற போது, மகள் கொழும்பில் படிக்க சென்றுவிட்டதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வியங்காட்டில் உயிரிழந்த வீட்டில் சிறுமி கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்துள்ளார். பெண்ணொருவர் அவரை அங்கு இணைத்து விட்டுள்ளார்.
மாதாந்தம் ரூ.25,000 ரூபா சம்பளம் பேசப்பட்டுள்ளது. மாதத்தில் ஒருநாள்- 10ஆம் திகதிகளில்- மகளுடன் குடும்பத்தினரை தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை ஏன் வீட்டு வேலைக்கு அனுப்பினீர்கள் என தாயாரின் கணவரிடம் வினவியபோது, சிறுமி பாதுகாப்பாக, சந்தோசமாக இருக்கட்டும் என அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் குடும்பத்திடமும் தொலைபேசியில்லை. சிறுமியிடமும் தொலைபேசியில்லை. குறிப்பிட்ட நாளில் சிறுமியின் குடும்பத்தினரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வீட்டிலுள்ள ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு சிறுமி மிஸ்ட் கோல் ஏற்படுத்திய பின்னர், குடும்பத்தினர் அழைப்பேற்படுத்தி பேசியுள்ளனர்.
17 வயது சிறுமி மாதத்தில் ஒரு முறைதான் தனது தாயாருடன் தொடர்பு கொள்லலாமென்பது கற்பனைக்கும் எட்டாத துயரமானது. இதில் வீட்டு உரிமையாளர்களின் பங்கு எவ்வளவு, தொலைபேசி வசதியற்ற பின்னணி எவ்வளவு என்பது பற்றிய தீர்ப்பை எம்மால் இப்பொழுது குறிப்பிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பில் 2 பொலிஸ் குழுக்களை விசாரணைக்கு நியமித்துள்ளதாக யாழ் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னரே இது குறித்து தெரிய வரும்.
சிறுமிக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் வீதமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப்பணத்தை வீட்டு உரிமையாளர்கள் பிடித்து வைத்துள்ளனர். மீதிப்பணத்தில் சிறுமிக்கு சங்கிலியொன்று செய்து கொடுக்குமாறு சிறுமியின் தாயாரே தம்மிடம் கேட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தைக்கு மாதாந்தம் ரூ.5000 கிடைத்துள்ளது. தீவிர வறுமை, கல்வியறிவின்மை, குடும்ப ஒழுங்கின்மை அற்ற சில பிரதேசங்களில் பிள்ளைகளை எங்காவது வேலைக்கனுப்பி விட்டு, பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுள்ள பெற்றோர்களை அவதானிக்க முடியும்.
இதேவேளை, தாயார் இரண்டாம் தாரமாக திருமணம் செய்யும் குடும்பங்களில், முதலாம் தாரத்து பிள்ளைகள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அனேகம்.
இந்த விவகாரத்தில் சட்ட வைத்திய அறிக்கை, நமது எதிர்பார்ப்பிற்கு அமைய வரவில்லையென்பதால், அதை கேள்விக்குட்படுத்துவது அறிவுடையதல்ல. பணம் கொடுத்து அறிக்கையை மாற்றிவிட்டார்கள் என்பது சாத்தியமற்றது. அதுதவிர, மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் வதந்தி பரப்புபவர்கள், நாளை தமது எதிர்பார்ப்பின்படி கொழும்பு அறிக்கை வரவில்லையென்றால், அங்குகும் பணம் கொடுத்து மாற்றிவிட்டார்கள் என்பார்கள். அதனால் இந்தவகை கருத்துக்களை கணக்கிலெடுக்க வேண்டியதில்லை.
சிறுமியின் தற்கொலைக்கான பின்னணியை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். பிள்ளைகள் நண்பர்களுடன் விளையாடித் திரியும் பராயத்தில், ஒரு வீட்டின் பின்னாலுள்ள சமையல்கூடத்தில் வெளியுலக தொடர்புகளற்று வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை? தனிமை முதுமையில் மட்டுமல்ல, இளமையிலும் கொடியதே.
இந்த விவகாரத்தில் சட்டரீதியாக யாரும் தண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அளவுகோல்களிற்குள் சிக்கும் குற்றத்தை யாரும் இழைக்கவில்லை. என்றாலும், தார்மீகரீதியில்- படிக்கும் வயதில் பிள்ளையை வேலைக்கு அனுப்பிய பெற்றோரா?… குறைந்த சம்பளத்தில் சிறுமி கிடைத்து விட்டார் என்பதற்காக, மாதம் ஒருமுறை பேசும் கட்டுப்பாட்டுடன் பணிக்கு அமர்த்திய வீட்டு உரிமையாளரா?… சிறுமி வீட்டு பணியாளராக இருப்பதை அறிய முடியாத நிர்வாக அமைப்பா?… நமது சமூகத்தின் ஒரு பகுதி பெரும் வறுமையில் உழல, மறுபக்கம் புங்குடுதீவில் கோயில் கட்டியதை போல வீணாக பணத்தை கொட்டும் தமிழ் சமூகமா குற்றவாளிகள்?