ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட கோழிக் கறிக்கு அளவாக உப்பு போடப்படவில்லையென்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கத்தியால் குத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும், கேரள ஹோட்டல் நிர்வாகத்துக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவம் 27ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் கேரளாபுரம் குட்டியில் சந்தியில் அமைந்துள்ள ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
தமிழகம், தூத்துக்குடியை சேர்ந்த இளவரசன் (35), அவரது தாய்வழி சகோதரர் ராபின்சன் (40), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அருண் (23) ஆகியோர் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தனர்.
இளவரசன், தான் ஆர்டர் செய்த கோழிக் கறியில் உப்பு இல்லை என்று ராபின்சனிடம் கூறினார். ராபின்சன், இதை ஹோட்டல் ஊழியரிடம் தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டார்.
ஹோட்டல் ஊழியர், உரிமையாளரின் மகன் முகமது ஷபினுக்கு போன் செய்தார். அவர் வந்த பின், இரு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேறினர்.
ஆனால், பின்னர் திரும்பி வந்து தகராறில் ஈடுபட்டனர். ஹோட்டல் உரிமையாளரின் மகன்கள், முகமது ஷபின் மற்றும் முகமது அசார், டிரைவர் ரஷிதீன் இஸ்லாம் ஆகியோரும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேரும் கத்திக்குத்து காயத்திற்கு உள்ளாகினர்.
பலத்த காயம் அடைந்த ராபின்சன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், இளவரசன் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். முஹம்மது ஷபின், முஹம்மது அசார், ரஷிதீன் இஸ்லாம் ஆகியோர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கம்பி கம்பியால் தாக்கப்பட்ட ராபின்சனின் தலையில் 27 தையல்கள் போடப்பட்டுள்ளன.



