தன்சானியாவில் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்துடன் நிறுத்திக் கொள்ளப் போவதில்லையென்றும், 10 மனைவிகளை அடைவதே தனது ஆசையென்றும் கூறியுள்ளார்.
தன்சானியாவின் கடாவி மாகாணத்தின், மம்பாண்டா நகராட்சியில் வசிக்கும் அதுமான் யெங்கயெங்கா, குறைந்தது 10 மனைவிகளையாவது வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலின் போது, பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
“இந்த மூன்று பேரும் போதாது. நிறைய பெண்கள் கல்யாணத்துக்காக காத்திருக்கிறார்கள். திருமணம் செய்யவிரும்பும் ஆண்கள், தயக்கமில்லாமல் பெண்களிடம் பேசி, உங்கள் யோசனையை சொல்லுங்கள். இதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. தயக்கமில்லாமல் பெண்களிடம் பேசி, திருமணம் செய்து கொள்ளுங்கள்“ என ஏனைய ஆண்களுக்கு யோசனையும் சொல்லியுள்ளார்.
புதிதாக இன்னொரு பெண்ணை குடும்பத்தில் சேர்ப்பதற்கு மனைவிகள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் யெங்கயெங்கா ஒப்புக்கொண்டார். அவர் தனது மனைவிகளான ஃபாத்துமா ரஃபேலி, ஆஷா பயஸ் மற்றும் மரியம் ஜான் ஆகியோருடன் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.
“அவர்கள் ஆம் என்று சொன்னால், நான் தொடர்வேன். நான் காத்திருக்கிறேன். ஆனால் நானும் அவர்கள் சொல்வதைக் கேட்பேன், ஏனென்றால் அவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தற்போதைய மனைவிகள் மூவரையும் உள்ளூர் மசூதியில் திருமணம் செய்து கொண்டார்.
வாரத்தில் ஒவ்வொரு மனைவியுடனும் தலா இரண்டு நாட்கள் தங்கும் யெங்கயெங்கா, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் ஒன்றாக இருப்பதாக கூறினார்.