நைஜர் நாட்டு ஜனாதிபதி மொஹமட் பாஸூமை, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தடுத்து வைத்துள்ளனர். ஜனாதிபதியை விடுவிக்க இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அல்லது தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளதாகவும் பாஸூமுக்கு நெருக்கமான வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அதிருப்தியடைந்த மெய்ப்பாதுகாவலர்கள் ஜனாதிபதியின் இல்லம் மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் “ஜனாதிபதியை விடுவிக்க மறுத்துவிட்டனர்” என்றும் “இராணுவம் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளது.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ருவிட்டரில், ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்பிரிவுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. தேசிய ஆயுதப்படைகள் மற்றும் தேசிய காவலர்களின் ஆதரவைப் பெற முயன்றன. ஆனால் அது தோல்வியுற்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மெய்க்காவலர் பிரிவுகள் சமரசத்துக்கு வராவிட்டால் இராணுவமும் தேசிய காவலரும் அவர்களை தாக்க தயாராக உள்ளனர்” என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
“ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் உள்ளனர்” என்று அது மேலும் கூறியது.
1960 இல் பிரான்சில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து நான்கு இராணுவ சதிப்புரட்சிகளைக் கண்ட நைஜரில், 2021 ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் Bazoum தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மையான மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
2020 முதல் அண்டை நாடான மாலி மற்றும் புர்கினா பாசோவில் நான்கு இராணுவ சதிப் புரட்சிகள் நடந்துள்ளன.