“தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள், அனைவரையும் அரவணைத்து ‘வாழு வாழ விடு’ என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது நினைக்கிறேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ‘தி க்ளென் கவுல்டு ஃபவுண்டேஷன்’ (The Glenn Gould Foundation) என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் சூஃபியிசத்தை நோக்கி தான் ஈர்க்கப்பட்டது குறித்து பேசிய ரஹ்மான், “என் அப்பா தனது கடைசி காலத்தில் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் ஆன்மிக குருக்கள் பலரை சந்தித்தோம். அதில் இறுதியாக சூஃபி ஆன்மிக குருவை சந்தித்தோம். அப்போது அந்த மத குரு எங்களிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை சந்திக்க வருவோம் என கணித்திருந்தார். அதன் பின்னர் என் அப்பா காலமானார். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் மறந்துவிட்டோம்.
10 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து ஸ்டூடியோ உபகரணங்களை எடுத்து வந்தபோது சுங்கவரித் துறை அதிகாரிகளிடம் கடும் சோதனைக்கு உள்ளானோம். அப்போது அங்கிருந்த அந்த மதகுருவின் மாணவர் ஒருவர் இந்த நடைமுறைகளை எளிதாக்கி எங்களுக்கு உதவினார். தொடர்ந்து நாங்கள் மீண்டும் அந்த சூஃபி மதகுருவை சந்திக்க சென்றோம். அவர் என்னுடைய ஸ்டூடியோவை ஆசீர்வதித்தார். பின்னர் வாழ்க்கையில் எல்லாம் மாற ஆரம்பித்தது.
யாருமே நீங்கள் இந்த நம்பிக்கையை தழுவ வேண்டும் என எங்களிடம் சொல்லவில்லை. தானாக இந்த நம்பிக்கையை ஏற்றோம். இதில் நான் அமைதியை உணர ஆரம்பித்தேன். ஸ்பெஷலாக உணர்ந்தேன். எல்லாமே நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது. நிராகரிக்கப்பட்ட ட்யூன்ஸ், பிரார்த்தனைகளுக்குப் பின் ஏற்கப்பட்டன. நாங்கள் சூஃபி கோயில்களுக்கு செல்ல ஆரம்பித்தோம். அது தொடர்பான புத்தகங்களை வாசித்து நிறைய கற்றுக்கொண்டேன். அது அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார்.
“நீங்கள் வேறொரு நம்பிக்கையை நாடும்போது உங்களுக்கு சமூக அழுத்தம் ஏதாவது இருந்ததா?” என்ற கேள்விக்கு, “இந்தியர்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். குறிப்பாக தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்; அனைவரையும் அரவணைத்து ‘வாழு வாழ விடு’ என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.