ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி கூட்டத்தில் பிரதான தமிழ் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன.
தென்னிலங்கை பிரதான கட்சிகளும் கலந்து கொள்கின்றன.
எனினும், தமிழ் மக்கள் தரப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தென்னிலங்கை தரப்பில் தேசிய மக்கள் சக்தியும் சந்திப்பை புறக்கணிக்கவுள்ளன.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள ரெலோ, புளொட் கட்சிகள், சர்வகட்ச கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
அத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியும் சந்திப்பில் கலந்து கொள்கிறது. ஆனால் வழமை பிரகாரம் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளமாட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுமே கலந்து கொள்வார்கள்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்வார்.
வடக்கு, கிழக்கில் உள்ள அரச கட்சிகளான ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன, அரச தரப்பில் பங்கேற்கும்.
தென்னிலங்கை கட்சிகளில் சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை மேலவை பேரவை தரப்பில் வாசுதேவ நாணயக்கார தரப்பினர் சந்திப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் சந்திப்பில் கலந்து கொள்வது குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்குள் அங்கம் வகிக்கும் சிறுபான்மையின கட்சிகள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுடன் தொடர்புபட்ட விடயமென்பதால், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் நிலைப்பாட்டில் உள்ளனர். சந்திப்பை புறக்கணிக்க வேண்டுமென்றும் கட்சிக்குள் சில தரப்பினர் வலியுறுத்தவதால், ஐக்கிய மக்கள் சக்தி இன்னும தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.