தந்திரிமலைப் பொலிஸில் கடமையாற்றிய ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக கஞ்சா வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்து பணிநீக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மதவாச்சி நீதவான் முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் மன்னிப்புக் கோரினார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போது தந்திரிமலை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 85010 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் போலியாக கைது செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
பொலிஸ் கான்ஸ்டபிளை பழிவாங்க இந்த கைது நடந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இந்த குற்றச்சாட்டின் கீழ் இடைநிறுத்தம் செய்வதாகவும் பொலிஸ்மா அதிபர், நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
தந்திரிமலை பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக அநுராதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவினால் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகவும், பழிவாங்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.