வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலையில் கைது செய்யப்பட்டார். தன்னை இடியன் துப்பாக்கியினால் சுட முயன்றபோது, அதை பறித்து திருப்பிச் சுட்டதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
நேற்று (21) இடியன் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவருக்கும், கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுகிறது.
கைதானவர் 42 வயதானவர்.
தோட்ட எல்லை தொடர்பாக இரு தரப்புக்கும் முறுகல் நிலவுவதாக கைதானவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரும், உறவினர்களும் தனது வாய்க்காலை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நேற்று தான் நெடுங்கேணி சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, கொல்லப்பட்டவரும், அவரது இரண்டு மகன்களும், கொல்லப்பட்டவரின் சகோதரரின் இரண்டு மகன்களும் தோட்டத்தில் நின்றதாக தெரிவித்துள்ளார்.
தனது தோட்ட வாய்க்காலில் கண்ணாடி துண்டுகள், சில கழிவுப்பொருட்களை அவர்கள் வீசியிருந்ததை அவதானித்து, அது தொடர்பில் கேட்டபோது சர்ச்சையேற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, மண்வெட்டி பிடியினால் அவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். தலையில் அடி விழுந்து, மண்டையோடு உடைந்து காயமேற்பட்டதாகவும், அடுத்த அடிகளை தடுத்த போது கையில் காயமேற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவரது தலையில் காயமேற்பட்டுள்ளது. கை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் விதமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், தற்போது கைதானவரின் தோட்டத்திற்குள்ளேயே நடந்துள்ளது. உயிரிழந்தவரும் மற்றவர்களும், தற்போது கைதானவரின் தோட்டத்தக்குள் நுழைந்தே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சமயத்தில் உயிரிழந்தவரின் மகன்களில் ஒருவர் இடியன் துப்பாக்கியை எடுத்து வந்ததாகவும், சம்பவ இடத்துக்கு வந்து, தன்னை நோக்கி சுட தயாரான போது, பாய்ந்து சென்று அவரை தள்ளிவிழுத்தியதாகவும், விழுந்தவரிடமிருந்து இடியன் துப்பாக்கியை பறித்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை பாதுகாத்துக் கொள்ள இடியனால் திருப்பிச் சுட்டதாகவும், ஒரு வெடி வைத்து விட்டு, இடியனுடன் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பியோடி விட்டதாகவும், அந்த துப்பாக்கி தன்னுடையதல்ல என்றும் தெரிவித்தார்.
காயத்துடன் காட்டுக்குள் தப்பியோடி சென்று, வலியுடன் படுத்திருந்ததாகவும், சற்று நேரத்தில் உறங்கி விட்டதாகவும், 6 மணிக்கு விழித்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் தான் சரணடைய விரும்பும் தகவலை, காய்கறி வாங்க வரும்போது அறிமுகமான பாதுகாப்பு தரப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுங்கேணி பொலிசார், தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்தவராக இருக்கவில்லையென்றும், புலிகளின் சமையல்கூடத்தில் சம்பளம் வாங்கும் பணியாளராக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-வவுனியா நிருபர் ரூபன்-