அவுஸ்திரேலியாவின் புதிய எழுச்சி நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ஐசிசி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் 2ஆம் நிலைக்கு உயர்ந்துள்ளார். சமீப காலங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கும் ஹெட்டிற்கும் 9 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது.
எனவே விரைவில் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேறவிருக்கிறார். ஆஷஸ் தொடர் 3வது டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக் ஐந்து மற்றும் ஒரு இடம் முன்னேறி முறையே 18வது மற்றும் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
நியூஸிலாந்தின் நம்பர் 1 துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் வலது முழங்கால் காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை கடந்த மார்ச் முதல் ஆடவில்லை. ஆகவே தற்போது இவரை விட 9 புள்ளிகள் குறைவாக இருக்கும் டிராவிஸ் ஹெட் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டி முடியும் போது நம்பர் 1 இடத்திற்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் ஜூலை 19ஆம் திகதி ஆஷஸ் 4வது டெஸ்ட் தொடங்குகிறது, தொடரில் இதுவரை 2-1 என்று அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
டிராவிஸ் ஹெட் 3 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இந்தத் தொடரில் 266 ரன்களை எடுத்துள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 116 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், லபுஷேன் போன்ற ஜாம்பவான்களுக்கு ஹெடிங்லீ டெஸ்ட் சரிவர அமையாததால், இந்த மூவருமே ஒரு இடம் பின்னடைவு கண்டனர். ஸ்மித் 4ஆம் இடத்திற்கும், லபுஷேன் 5ஆம் இடத்திற்கும், ஜோ ரூட் 6ஆம் இடத்திற்கும் பின்னடைவு கண்டனர்.
பாகிஸ்தானின் ஸ்டார் பிளேயர் பாபர் அசாம் டெஸ்ட் தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கிறார்.
துடுப்பாட்ட தரவரிசையில் உஸ்மான் கவாஜா 7ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 8ஆம் இடத்திலும் இலங்கையின் திமுத் கருணரத்ன 9ஆம் இடத்திலும் ரிஷப் பண்ட் 10ஆம் இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினின் நம்பர் 1 இடத்திற்கு அடுத்ததாக அதிக இடைவெளி இல்லாமல் பாட் கமின்ஸ் இருக்கிறார். இவர் ஹெடிங்லீயில் அற்புதமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் ஹெடிங்லீயில் 2 வது இன்னிங்சில் அதியற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளையும் மொத்தம் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 11ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.