விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலெங்கா, 25ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரினா சபலெங்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் அரினா சபலெங்கா, 6ஆம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபீருடன் மோதுகிறார்.
ஆன்ஸ் ஜபீர் கால் இறுதி சுற்றில் நடப்பு சம்பியனும் 3ஆம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் போராடி 6-7(5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.