நாடாளுமன்றத்தில் நீதித்துறையை அச்சுறுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் எவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது என்பதை வடக்கிற்குச் சென்று பார்க்குமாறும் தெரிவித்தார்.
“நாங்கள் அனைவரும் நீதித்துறையை மதிக்கிறோம்” என்று வீரசேகர கடிதத்தில் கூறுகிறார்.
சரத் வீரசேகரவினால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாகவே இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் உயர்நீதிமன்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கைக்கு, அவருக்கு பயந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லையா என்றும், இலங்கை நீதிமன்றங்கள் குறித்து வெளியிடப்பட்ட அவதூறு மற்றும் கேவலமான செய்திகளை கண்டித்து தானாக முன்வந்து ஜெனிவா சென்றதாகவும் சரத் வீரசேகர கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.