போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இலங்கை உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவையையும், சமயப் பிரசங்கத்தையும் இணையவழியில் நடத்துவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். “
இந்த வேலைத்திட்டம் இணையவழியில் நடத்தப்படுவதாகவும் வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வரவு வைத்து அதில் இணைவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதகர் பெர்னாண்டோ வாரத்திற்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தனது பிரசங்கங்களை நடத்திய கட்டுநாயக்கவில் ‘மிராக்கிள் டோம்’ அமைந்துள்ள நான்கு ஏக்கர் காணியின் உரிமையாளரிடமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தேவாலயமொன்றை நிர்மாணிப்பதற்காக பெர்னாண்டோவுக்கு காணியை தானமாக வழங்கியதாக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்து ஆடை வியாபாரியான உரிமையாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கோடீஸ்வர தொழிலதிபர், முன்னாள் காவல்துறை அதிகாரியாவார். தற்போது ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற பல தொழிலதிபர்கள் போதகரின் சீடர்களில் இருப்பதாகவும், அவர்களில் முன்னணி வாகன விற்பனையாளரும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
போதகர் பெர்னாண்டோவின் சீடர்களில் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
போதகரின் சீடர்களான சில அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை கூட விற்று அந்த பணத்தை இந்த ‘மிராக்கிள் டோம்’ மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவாக வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான உதவிகளை வழங்கிய சீடர்களிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ய சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன