தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, உச்சபட்ச அதிகார பரவலாக்கலை வழங்க வேண்டும், அந்த இறுதி தீர்வை எட்டுவதற்குள்- உடனடியாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணம் மேற்கொள்ளும் போது, மேற்படி விவகாரத்தை வலியுறுத்தி, நடவடிக்கையெடுக்க வேண்டுமென இந்திய பிரதமரிடம் இந்த கடிதத்தின் மூலம் 6 கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் விடுதலை இயக்கம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்), ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும், க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டு, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கவுள்ளன.
இன்று சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் கட்சித் தலைவர்கள் கூடி, கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தற்போது கொழும்பில் தங்கியிருப்பதால், அவர் இன்று கையொப்பமிடவில்லை.
5 கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் நாளை (13) கையொப்பிட்ட பின்னர், நாளையே கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் கையளிப்பர்.