ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி சேனல் ஒன்று AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரம்பரிய கைத்தறி சேலை உடுத்திய இளம்பெண் போல் தோற்றமளிக்கும் இந்த செயற்கை செய்தி வாசிப்பாளருக்கு லிசா என பெயரிடப்பட்டுள்ளது.
செய்தியின் சாராம்சத்திற்கு ஏற்றவாறு முகபாவனைகளை மாற்றும் லிசா தற்போது ஆங்கிலத்திலும், ஒடியாவிலும் செய்திகளை வழங்கிவருகிறது.
“லிசா துல்லியமாகவும் செயல்திறனுடனும் செய்திகளை வழங்க AI மற்றும் LLM இன் ஆற்றலைப் பயன்படுத்துகிறார். மெய்நிகர் தொகுப்பாளருடன் அற்புதமான இயந்திர கற்றல் அல்காரிதம்களை இணைத்து, லிசா தொழில்நுட்பம் மற்றும் இதழியல் சிறப்பின் சரியான தொகுப்பாக இருக்க முயற்சிப்பார். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், பொறுப்புடனும் அனைவரையும் உள்ளடக்கியும் செய்வோம்,” என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய AI செய்தி வாசிப்பாளர்களால் 24 மணி நேரமும் செய்திகளை வழங்க முடிவதுடன், நேரலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும் என கூறப்படுகிறது.
அதே சமயம் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்ப விஷமிகள் இவற்றை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.