3 புதிய பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்கு ஒருவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பதில் நீதவான் ஹர்ஷனி ராஜகருணா நேற்று இந்த உத்தரவை வழங்கினார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த 3 புதிய பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (08) அதே விகாரையில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று பிக்குகள் மற்றும் விகாரையில் தங்கியுள்ள எஞ்சிய புதிய பிக்குகளை நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி கினிகத்தேன பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த விகாரையின் 3 புதிய பிக்குகளை சந்தேகத்திற்குரிய பிக்கு துஷ்பிரயோகம் செய்ததாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்து அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது.