இலங்கை மீனவர்கள் பல நாள் மீன்பிடிக்காக அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு வசதியாக இந்திய கடல் எல்லைக்குள் கடல்பாதையொன்றை உருவாக்க இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தற்போது நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவில, மாத்தறை போன்ற பகுதிகளிலிருந்து கடலுக்குச் செல்லும் இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவைச் சுற்றி அரேபியக் கடலுக்குச் சென்று வருகின்றன. இருப்பினும், இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) வழியாக சென்றால், அவர்களுக்கு 400 கடல் மைல்கள் பயணத்தை குறைக்கலாம்.
எனினும், இந்தியாவின் EEZ எல்லை ஊடாக அரபிக்கடலுக்குச் செல்லும் இலங்கை மீனவர்கள் தற்போது இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியதை அடுத்து இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பயன்படுத்தி இந்த புதிய முயற்சியை ஆரம்பிக்க இலங்கை இப்போது திட்டமிட்டுள்ளது.
இலங்கை மீன்பிடி கப்பல்களுக்கு EEZ ஊடாக செல்வதற்கு இந்தியாவின் அனுமதியை அரசாங்கம் கோருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் புதுடில்லிக்கு விஜயம் செய்யும் போது இது குறித்து விவாதிக்கப்படும்,” என்றார்.