பொலிசார் தாக்கல் செய்யும் பல பொய் வழக்குகளாலும் நீதிமன்ற தாமதம் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக யாழ்ப்பாண பொலிசார் அண்மையில் தாக்கல் செய்த பொய் வழக்கில், நீதிமன்றத்தில் 3 தவணைகள் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
நாடாளுமன்றத்தில் இன்று (5) உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இன்று நீதிமன்றத்தில் வழக்கு தாமதங்களை பற்றி பேசுகிறோம். நீதிமன்ற வழக்கு தாமதங்களிற்கு பொய் வழக்குகள் தாக்கல் செய்வதும் ஒரு முக்கிய காரணம். இதற்கு ஒரு உதாரணம், அண்மையில் யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கு. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால் இதில் 7 பேருக்கு எதிராக மட்டும் யாழ்ப்பாண பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். தமக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொதுமக்கள் யாரும் முறைப்பாடு செய்யவில்லை. பொலிசார் காழ்ப்புணர்ச்சியினால் இந்த பொய் வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 3 தவணைகள் நடைபெற்று விட்டது என்றார்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு தொடர்பில் தம்மால் செயற்பட முடியாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச செயற்பட்டார்.
இந்த வழக்கில் செயற்படும்படி கேட்கவில்லையென்றும், பொய் வழக்குகளால் நீதிமன்ற தாமதம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டவே இதனை தெரிவித்ததாக சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.