இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தின் செவனகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கினிகல்பலஸ்ஸ கிராமத்தில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறைகளைப் போன்ற பாறைகள் இருப்பதாக புவியியல் நிபுணர்கள் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஆராய நாசா விஞ்ஞானிகள் குழு இலங்கை வந்துள்ளது.
செவனகல பிரதேச செயலக பகுதியின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில், ‘சர்ப்பன்டைன்’ எனப்படும் ஒரு வகை பாறை உள்ளது. இவை செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளை ஒத்தவை. இலங்கையின் தென் மாகாணத்தின் மேலும் சில இடங்களிலும் இந்தவகை பாறை காணப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாசாவில் மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளனர்.
கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட சில பாறை மாதிரிகளும் மேலதிக ஆய்வுகளுக்காக நாசாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளன. கினிகல்பலஸ்ஸவிற்கு வெகு தொலைவில் உள்ள இடிக்ககொலபலஸ்ஸ, அம்பலாந்தோட்டை உஸ்ஸங்கொட உட்பட பல இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட உள்ளன.
இது குறித்து களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையின் புவியியல் அம்சங்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள இந்த குழு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.




