பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய அமைச்சர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தகுந்த சூழல் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துக்கொண்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்பதோடு, அவர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், புதிய விநியோகஸ்தர்களின் விநியோகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் காரணமாக இதுவரை நிதி நெருக்கடியில் இருந்த மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிதி ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
“புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் பலனாக கடந்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளை இல்லாமல் செய்து தொடர்ச்சியாக மின்வெட்டு செய்யப்படுவதையும் தடுக்க முடிந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலும், ஜூன் மாத்திலும் மின்சார கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வீடுகளுக்காக மின்சாரத்தை பாவனை செய்வோர் எண்ணிக்கை 60 இலட்சமாக காணப்படுகின்றது. அவர்களில் 30 – 60 மின் அலகுகளை பாவனை செய்யும் 35 இலட்சம் பேருக்கு 55 ரூபாவினால் கட்டணக் குறைப்புச் செய்யப்பட்டது. அதேபோல் பதிவு செய்யப்ட்டிருக்கும் 40,000 வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுக்கும் குறைவாக பாவனை செய்யும் 15,000 வழிபாட்டுத் தலங்களுக்கும், தொழிற்துறைகளுக்கும் கட்டணக் குறைப்பு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்தது.
கடந்த காலத்தில் மின்சர சபை 409 பில்லியன் நட்டமீட்டியிருந்தது. அவற்றில் கடந்த வருடத்தின் நட்டம் மாத்திரம் 167.2 பில்லியன்களாக பதிவாகியிருந்த்து. அதனால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியிருந்தன.
எவ்வாறாயினும் தற்போது அனைத்து விநியோகஸ்தர்களுக்குமான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. மீள்புதுப்பிக்கத்க்க மின் சக்தி வேலைத்திட்டங்களை புதிதாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 120 பில்லியன்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் அரசாங்கம் அந்த தொகையை பொருட்படுத்தவில்லை.
அதனால் தற்போது மின்சார சபை நிதி ரீதியாக வலுவடைந்துள்ளது. கடந்த 03 வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் புதிதாக கோரப்பட்டிருந்த 36,000 இணைப்புகளில் 20,000 மின் இணைப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த இரு மாதங்களில் மிகுதியான மின் இணைப்புக்களும் பெற்றுக்கொடுக்கப்படும்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் செப்டம்பர் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் செய்துக்கொண்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்பதோடு, அவர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளது. அதேபோல் அவர்களு 150 எரிபொருள் நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களது கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் சிபெட்கோ என்ற பெயரில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் அவர்களது நிறுவனத்தின் பெயரிலேயே விநியோகிக்கப்படும்.
இந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் போது, ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறவிடுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் மூலம் இந்தியா , ஈரானிடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்தி முடிக்கும் அதேநேரம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடன்களைவும் விரைவில் செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது நிதி ரீதியாக பலமடைந்துள்ளது. ஆனால் அதன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படமாட்டாது. மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய வரைவு தற்போது சட்ட வல்லுனர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. வரைவு கிடைத்தவுடன் அதனை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு அமைச்சரவையிலும் சமர்பிக்கப்பட்ட பின்னர் புதிய சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும் இயலுமை கிட்டும்.
இதனால் மின்சார சபை ஊழியர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. NVQ தொழிற் பயிற்சித் தகைமைகளுடன் தற்போது தற்காலிகமாக சேவையில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் விலை மாற்றத்தின் போது எண்ணெய் கையிருப்புக்களை பேணத் தவறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இன்று காலை ராஜகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தை அரசாங்கதினால் கையகப்படுத்தப்பட்டது.
எரிபொருள் விலை மாற்றத்தின் போது எண்ணெய் கையிருப்பை தக்க வைக்கத் தவறிய 120 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பிலான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதால் புதிய ஊழியர்களை சேவையில் இணைத்துகொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கமும் இணைந்து எடுத்த சரியான தீர்மானத்தின் பலனாக அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடிந்துள்ளது.
கடந்த காலங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்காக கோரப்பட்ட விலைமனுக் கோரலுக்கான முதலீட்டாளர்கள் இதுவரையில் வரவில்லை. விலைமனுக்களை பெற்றுக்கொண்ட நிறுவனங்களும் வேறு நிறுவனங்களுக்கு அவற்றை விற்றுள்ளன. எனவே, அடுத்த அமைச்சரவை அமர்வின் போது 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான விலைமனுக்கோரல் ரத்து செய்யப்பட்டு, புதிய விலைமனுக் கோரல் அறிவிக்கப்படும். மேலும் அதானி நிறுவனத்திற்கு 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை தயாரிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் அவர்களது உற்பத்தியை தேசிய மின் கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என அந்த நிறுவனங்களின் பெரும்பாலான ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
ஆனால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு கோரிக்கை என்பவற்றை ஏற்க முடியாது. உலகின் எந்தவொரு நாடும்அவ்வாறு செய்யாது. எனவே அவ்வாறான செயற்பாடுளை நாம் நிறுத்த வேண்டும். 24,000 மின்சார ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு வழங்கப்படும். நாங்கள் அதனை நிறுத்தியுள்ளோம்.
செயல்திறனுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அனைத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிறுவனங்கள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஏப்ரல், டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் போனஸ் நிறுவனம் லாபம் ஈட்டினால் மட்டுமே வழங்கப்படும். அதுவும் திறம்பட வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே. ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாத போனஸ் கொடுப்பனவுகளும் நிறுவனங்கள் இலாபமீட்டினால் மட்டுமே வழங்கப்படும். அதுவும் செயல்திறன் மிக்க ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்.
மேலும், இந்திய கடன் உதவியின் கீழ் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி கட்டமைப்புக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் ஐந்து கிலோவாட் சூரிய சக்தியில் இயங்கும் மின் கட்டமைப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதனை 2023-2042 மின் உற்பத்தி திட்டத்தில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பலன்களை கருத்திற்கொண்டு நாம் எப்போது அணுசக்தி துறையை வலுப்படுத்துவது என்பது தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.