25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா

♦மு.தமிழ்ச்செல்வன்

அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் குழந்தையை விட பெற்ற தாய் நாட்டின் மீதான அதீத பாசமே தயானியின் இந்த முடிவுக்கு ஒரேயொரு காரணம்.

தான் ஒரு பாலூட்டும் தாய் என்னால் களமுனைக்கு செல்ல முடியாது என தயானி அன்று அதனை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவள் அதனை அன்று விரும்பவில்லை தன் குடும்பத்தை விட தாய் மண்ணின் விடுதலை அவளுக்கு பெரிதாக இருந்தது என அவளது சகோதரி சொல்கின்றார்.

புறநானூரை விஞ்சிய வீரப் பெண்ணாக முகமாலை நோக்கி சென்றவள் இரண்டாம் நாள் கப்டன் தென்னரசியாக தோழிகளால் கிளிநொச்சியில் உள்ள அவளது இல்லத்திற்கு வித்துடலாக சுமந்து வரப்பட்டாள்.

இவளது கணவன் ஒரு முன்னாள் போராளி. அவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கும் முடியவில்லை. இருப்பினும் ஒன்று மட்டுமே தெளிவாக புரிகிறது. நாட்டுக்காக குடும்பமாக தங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள் என்பது.

இரணைமடுவில் உள்ள தயானியின் இ;ல்லத்தில் இறுதி வீரவணக்க நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு நடப்பது எதுமே தெரியாது. காலங்கள் கடந்து செல்கிறது. கடும் யுத்தம் இடப்பெயர்வு என தொடரும் அவலத்திற்குள் அப்பம்மாவும் இறந்துவிடுகிறார். யாரும் அற்ற அந்த குழந்தை இப்போது தயானியின் அக்காவுடன் அதாவது குழந்தையின் பெரியம்மாவுடன். மீள்குடியேறும் போது குழந்தை மாமாவின் பதிவில் பரந்தனில் குடியேறுகிறது.

பின்னர் இந்த குழந்தை 24.01.2010 இல் தனது ஆறு வயதில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் அதாவது குருகுலத்தில் தவராசா சானுயாவாக செல்கிறாள். இந்த சானுயாவே கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைப்பெற்ற இந்திய பகிரங்க சர்வதேச கராத்தே சம்பியன்சிப் போட்டியில் இலங்கை தேசிய அணியின் சார்பில் பங்குபற்றி வெண்கல பதக்கம் பெற்று நாடு திரும்பினார்.

ஒரு யுகத்தின் ஒரு வீரத்தாயினதும், தந்தையினதும் மகளாக அவர்களது முகம் அறியா சானுயா இன்று விளையாட்டில் வீர மகளாக வலம் வருகிறாள். கற்பைனயில் எண்ணிப்பார்க்க முடியாத தியாகங்களும், வீரங்களும், நிறைந்த ஒரு சமூகத்தில் பிறந்த புதல்வியாகவே சானுயா இருக்கின்றாள்.

சிறுவர் இல்லத்தில் இணைக்கப்பட்ட காலத்தில் இருந்தே கராத்தே கலையினை பயின்று வந்து சானுயா தனது ஏழாவது வயதில் இலங்கை கராத்தே சம்மேளனத்தால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கரோத்தே போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றி பதக்கத்தை வென்றதோடு, தொடர்ந்து 14 வயதிலும் தேசிய ரீதியல் நடாத்தபட்ட கராத்தே போட்டியில் பங்குபற்றி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

ஒன்பது வருடங்களின் பின் கடந்த வருடம் விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி சார்பாக பங்கு பற்றி பதக்கம் வென்றதன் மூலம் இலங்கை தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டாள் சானுயா. இந்தப் போட்டியில் வடக்கு மாகாணம் ஏழு பதக்கங்களை வென்றது. இதில் கிளிநொச்சி மாவட்டம் இந்துக் கல்லூரி 4 பதக்கங்களை பெற்றது. இந்த நான்கு பதக்கங்களும் மகாதேவா சிறுவர் இல்லத்தின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சானுயாவுக்கு ஆரம்பம் முதல் இன்று வரை கராத்தே பயிற்சியை சிறுவர் இல்லத்தில் வழங்கி வருகின்றவர் சின்னத்துரை விஜயராஜ். இவர் கராத்தே ஏழாவது கறுப்பு பட்டி, மற்றும் ஏ தர கராத்தே நடுவராகவும், வடக்கின் சிறந்த பயிற்றுவிப்பாளராகவும் காணப்படுகின்றார்.

இவர் மூலம் கிடைத்த தொடர்ச்சியாக பயிற்சி, இல்ல நிர்வாகம்த்தின் ஒத்துழைப்பு என்பன சானுயாவை சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப்பெற வைத்துள்ளது.

புதுடெல்லியில் நடைப்பெற்ற போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை, பங்களாதேஸ், நோபாளம், யப்பான், ஓமான், பூட்டான், மலேசியா, குவைட், உஸ்பெகிஸ்தான் என12 நாடுகள் பங்குபற்றியிருந்தன. இதில் இலங்கை 5 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் என 16 பதக்கங்களை வென்றது. இதில் ஒன்று சானுயாவினுடையது.

யுத்தம் நெருக்கடி என எதுவும் இன்றி உலகின் வல்லரசு நாடுகளாகவும், பொருளாதார பலம் பொருந்திய நாடுகாளவும் இருக்கின்ற நாடுகளின் வீராங்கனைகளுடன் யுத்தத்திற்குள் பிறந்து எல்லா வகையான நெருக்கடிகளையும் சுமந்து சிறுவர் இல்லத்தில் உள்ள சானுயா போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்றிருப்பது ஏனையவர்கள் பெற்ற தங்கப் பதக்கத்தை விட மிகப்பெரியது என்றே கூற வேண்டும்.

சாதிப்பதற்கு நம்பிக்கையும், முயற்சியும், ஒத்துழைப்பும் இருந்தால் போதும் எந்த தடைகளையும் தாண்டிவிடலாம் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாணரம். அன்று இந்த மண் சானுயாவின் அம்மாவால் பெருமைப்பட்டது. இன்று உன்னால் பெருமைப்படுகிறது. ஒரு வீரத்தாயின் வீர மகள் என்பதனை நீ நிரூபித்திருகிறாய். ஆனாலும் நீ இன்னும் முன்னோக்கிச் செல்ல நிறைய படிகள் உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

Leave a Comment