ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில், நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுள்ளது. வெற்றிபெற இன்னும் 257 ஓட்டங்கள் தேவை.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் வோர்னர் 77 ஓட்டங்கள்.
இதையடுத்த, 371 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை பெற்றுள்ளது. பென் டக்கட் 50, பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் 2வது இன்னிங்ஸில் நதன் லயன் காயத்துடன் துடுப்பெடுத்தாட வந்தார்.
இந்த டெஸ்ட் அவுஸ்திரேலியாவின் மற்ற வீரர்களைவிட சுழற்பந்து வீச்சாளர் நதன் லயனுக்கு சிறப்பு வாய்ந்த போட்டி. இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 5 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளரும் படைக்காத சாதனை இது. இதற்கு முன் அலெஸ்டர் குல், அலன் போபார்டர், மார்க் வோக், சுனில் கவாஸ்கர், மெக்கல்லம் என்று துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில் இந்த சாதனையில் பங்குபெறும் முதல் பந்துவீச்சாளரானார் லயன்.
ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்த பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் நதன் லயனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக வீரர்களின் உதவியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற அவர் அதன்பின் களத்துக்கு திரும்பவில்லை. ஆட்டத்தின் மூன்றாம் நாளுக்காக அவுஸ்திரேலிய வீரர்கள் களத்துக்கு வரும்போது ஊன்றுகோல் உதவியுடன் மைதானத்தில் நடந்து வந்தார் லயன். இதனால் போட்டியில் இருந்து லயன் வெளியேறுவார் என்று பேசப்பட்டுவந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நான்காம் நாளில் காயத்தையும் பொருட்படுத்தாமல் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கினார். வலியுடன் அவர் களத்துக்கு வரும்போது மொத்த மைதானமும் அவரை எழுந்துநின்று பாராட்டியது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 9வது விக்கெட்டுக்கு களம்புகுந்த லயன், கிட்டத்தட்ட ஐந்து ஓவர் வரை களத்தில் இருந்தார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு பவுண்டரி அடித்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.
TAKE A BOW, NATHAN LYON.
One of the great moments in Test history. pic.twitter.com/MWBSiRu3g3
— Johns. (@CricCrazyJohns) July 1, 2023