தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கை தமிழர்களின் பண்டைய தாயகமல்ல. அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு பதிலளிக்க நான் தயார். வடக்கு கிழக்கில் கட்டப்பட்டுள்ள பழைய கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளது என பெரும் “புரட்டு“ விட்டுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.
தென்னிலங்கை தரப்பினர் அவரை தொல்லியல் சக்ரவர்த்தி என விளிப்பதுண்டு. எனினும், தொல்லியல்துறையில் அவர் ஒரு கல்வியியலாளர் அல்ல. அவர் தமிழர்களின் வரலாறு தொடர்பில் இனவாத அடிப்படையில்- தவறான கருத்துக்களையே முன்வைப்பதுண்டு. அவ்வாறே தற்போதும் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் கந்தரோடையில் மட்டும் 50 ஸ்தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. விகாரை தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளில், அதனை நாக விகாரை என குறிப்பிடுகிறது.
வடக்கில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் மூலம், கடந்த காலங்களில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பொலன்னறு ராஜதானியை ஆண்ட முதலாம் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊாக இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் சரக்கு வர்த்தகம் நடந்தது கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கை காரணமாக துறைமுக விதிகள் குறித்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டது. அந்த கல்வெட்டு தற்போது நாகபூசணி அம்மன் கோயிலில் உள்ளன. தொல்லியல் திணைக்களத்திற்கு இது பற்றி பல தடவைகள் தெரிவித்தும் பலனில்லை.
கல்வெட்டின் இறுதியில் சமஸ்கிருதத்தில் ‘மஹா பராக்கிரமபாகு சகல சிங்களச் சக்கரவர்த்தி’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நாங்கள் வியந்து போனோம்.
தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை.
அப்படி நிருபிக்க யாரேனும் இருந்தால் நான் பதில் சொல்ல தயார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பழைய கோயில்கள் பண்டைய பௌத்த தலங்களில் கட்டப்பட்டுள்ளன. வவுனியா, மட்டக்களப்பு,
முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கோயில் கட்டப்பட்டிருந்தால் அது பழமையான பௌத்த விகாரையாகும். இது என் கண்ணால் பார்த்த ஒன்று.
சில பண்டைய பௌத்த புனித ஸ்தலங்களிலிருந்து கலைப்பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தாந்தாமலை பௌத்த தளத்தில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புளுகுணாவ புத்த விகாரையில் இருந்து ஒரு கல் இருக்கை அந்த கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
முல்லைத்தீவு குருந்தூர்மலை பௌத்த விகாரைக்கு ஆறு முறை சென்றிருக்கிறேன். 1964 இல் முதன்முதலில் இந்த இடத்திற்குச் சென்றேன். அந்தப் பகுதியில் ஒரே ஒரு தமிழன் வாழ்ந்தான். குருந்தூர் மலை இடிபாடுகளை நமக்குக் காட்டியவர் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தவர்.
குருற்தூர்மலை தொல்லியல் தளத்திற்கு முதல்முறை சென்றபோது, ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு அழிக்கப்பட்டது. குருந்தூர் மலை விகாரையின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மிஹிந்து மன்னர் வந்ததாக அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கல்வெட்டில் அந்தப் பகுதி குறுங்காமம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கிராமத்தில் ஒரு சிறிய ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் படி ஏரியின் பெயர் குருந்த வாபி. அந்த ஏரி தற்போது தண்ணிமுறுப்பு ஏரி என அழைக்கப்படுகிறது. பின்னர் தமிழ் கிராமங்கள் தோன்றியதன் மூலம் மக்கள் தண்ணிமுறுப்பு ஏரியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பௌத்த புனித தளத்திற்கு உரிமை கோர வரவில்லை. இடிபாடுகள் சேதமடையவில்லை. சமீபகாலமாகத்தான் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். சாதாரண தமிழ் மக்கள் உரிமை கோரவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள். வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகங்கள் அவை என்றார்.