நுவரெலியா, கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட முக்கிய பாதாள உலக உறுப்பினர் என கூறப்படும் ஒருவருடன் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் இராணுவக் கப்டன் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவருடன், T-56 துப்பாக்கி, 108 ரவைகள், இரண்டு பிரவுனிங் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது மில்லிமீற்றர் வகையிலான 26 துப்பாக்கி ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட T-56 துப்பாக்கியின் தொடர் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதாக சோதனையை மேற்கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் டுபாயில் மறைந்திருக்கும் ‘ஹோமாகம ஹந்தயா’ என்ற பாதாள உலகக்குழு தலைவனின் பிரதான அடியாள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்களில் 42 பண மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இதுதவிர , மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து இரண்டு திறந்த வாரண்டுகள் உள்ளன.
கடந்த மே மாதம் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று துப்பாக்கிகளை காட்டி மிரட்டி மண்டியிட்ட வைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இராணுவ கப்டன் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் நுவரெலியாவிற்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய கப்டன் பாதாள உலக உறுப்பினர்களுக்கு தகவல் கொடுப்பவர் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.