கிளிநொச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் (இரணைமடு) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு விசாரணைப் பிரிவினர் தேடி வந்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று பகல் கணேசபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுகிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
22, 24 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்மை இரண்டு நாள் தடுத்து வைத்து கடுமையாக தாக்கியதற்கு பழிவாங்கவே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மாத்திரமே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.