அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன், தொடர்ச்சியாக 100 டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார்.
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட், புதன் அன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. அவுஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன், தனது 122வது டெஸ்டை லோர்ட்ஸில் விளையாடவுள்ளார். இதுவரை தொடர்ச்சியாக 99 டெஸ்ட்களில் விளையாடி வந்துள்ள லயன், தொடர்ச்சியாக 100 மற்றும் அதற்கும் அதிகமான டெஸ்ட்களில் விளையாடிய வீரர்களின் வரிசையில் இணையவுள்ளார்.
தொடர்ச்சியாக அதிக டெஸ்ட்களில் விளையாடிய வீரர்களில் இங்கிலாந்தின் அலஸ்டர் குக் முதலிடத்தில் உள்ளார். அவர் தொடர்ச்சியாக 159 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். அலன் போர்டர் 153 டெஸ்ட்களிலும் மார்க் வோஹ் 107 டெஸ்ட்களிலும் காவஸ்கர் 106 டெஸ்ட்களிலும் மெக்கல்லம் 101 டெஸ்ட்களிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்கள். இதற்கு அடுத்த இடத்தில் உள்ளார் லயன்.
மேலும் தொடர்ச்சியாக 100 டெஸ்ட்களில் விளையாடும் முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் லோர்ட்ஸ் மைதானத்தில் அடையவுள்ளார்.
என்னைப் பற்றி பேசுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்தச் சாதனை குறித்து மிகவும் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் லயன்.