தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வாக்னர் கூலிப்படையினர் வெளியேறியுள்ளனர். இதனால் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கூலிப்படை தலைவர் ப்ரிகோஜின் சிரித்துக்கொண்டே ஆதரவாளர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு நகரத்திலிருந்து வெளியேறினார்.
அதே நேரத்தில் அவரது வீரர்கள் தங்கள் தளங்களுக்குச் செல்ல டிரக்குகளில் ஏறினர்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ், ப்ரிகோஜின் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸில் தங்க ஒப்புக்கொண்டார். வாக்னர் தலைவருக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்றும் அவரது துருப்புக்கள் மீதும் வழக்குத் தொடரப்படாது என்றும் கிரெம்ளின் கூறியது.
மொஸ்கோவில் இருந்து 200 கிமீ (124 மைல்) தொலைவில் இரத்தக்களரியை தவிர்க்கும் வகையில் தனது படைகள் இருக்கும் போது தான் இந்த முடிவை எடுத்ததாக பிரிகோஜின் கூறினார்.
சனிக்கிழமை அதிகாலையில் வாக்னர் படையினால் கட்டுப்படுத்தப்பட்ட தெற்கு ரஷ்யாவில் ரோஸ்டோவ்-ஆன்-டான் மாவட்டத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
அத்துடன், கிளர்ச்சியையடுத்து ரஷ்யாவின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட வீதிக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.