போதைப்பொருள் வழக்கில் தனக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் செய்திகளை நடிகை ஆஷு ரெட்டி மறுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா போலீசார் சினிமா தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் கோகோயின் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். விசாரணையில் கே.பி.சவுத்ரியிடம் இருந்து போலீசார் முக்கிய தகவல்களை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
அவரது போன் டேட்டாவை சோதனை செய்த போலீசார், பரபரப்பு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளனர். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆஷு ரெட்டியுடனும், வேறு சில நடிகைகளுடனும் கே.பி.சவுத்ரி நூற்றுக்கணக்கான முறை பேசியதாக தெரிகிறது. வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் உரையாடியதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை அஷுரெட்டி, சினிமா நடிகை ஜோதி, பஞ்சாகுட்டா புஷ்பக் கேப்ஸ் உரிமையாளர் ரத்தன் ரெட்டி மற்றும் ஆகியோரிடம் கே.பி.சவுத்ரி பலமுறை போனில் பேசியதாக தெரிகிறது. பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக விசாரணையில் கே.பி.சவுத்ரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் அஷுரெட்டி தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ததாக கூறி உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- போதைப்பொருள் வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து உள்ளார். சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனக்கு யாருடனும் தொடர்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் பொய்யான செய்திகள் என குறிப்பிட்டுள்ளார் அஷுரெட்டி,தேவைப்பட்டால் நேரம் வரும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் உண்மையை விளக்குவேன். தனது அனுமதியின்றி தனது தொலைபேசி எண்ணை பொதுவெளியில் பகிர்ந்தால் அதை சகித்துக்கொள்ள முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.